கீழடியைப் பின்னணியாகக் கொண்ட ’ஆதனின் பொம்மை’ நாவல் – மதிப்புரை

SHARE

3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று நிகழ்வுகள் எப்படி இருந்திருக்கும்? நம்முடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அக்கால கட்டத்தில் மக்கள் எப்படிபட்டவர்களாக இருந்திருப்பார்கள்? என ஏராளமான கேள்விகளுக்கு விடைகளை அள்ளித் தருகிறது எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய ’ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவல்.

3000 ஆண்டுகள் காலசக்கரத்தை பின்னோக்கி சுழற்றி நம்மை கற்பனைக் குதிரைகளின் வண்டிகளில் பூட்டி நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்திற்கு அழைத்து செல்கிறான் ஆதன். யார் இந்த ஆதன்? எதற்காக அவன் இவற்றையெல்லாம் நம்மிடம் சொல்கிறான்? விடைகளை எளிய நடையில் அழகியலோடு விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நாவலாக்கி தந்துள்ளார் எழுத்தாளர் உதயசங்கர். சிறார் இலக்கியத்தில் தனக்கென தனி முத்திரையை பதித்து வரும் இவருடைய எழுத்தின் வாயிலாக குழந்தைகளுக்கு வரலாற்றையும் அவற்றின் தொன்மையையும் இந்நாவலின் வழியாக கடத்தியுள்ளார்.

கீழடி அகழாய்வின் மூலமாக 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்வியல்களை நாம் அறிந்து கொண்டு வருகிறோம். நாம் அறிந்தவற்றை நம் குழந்தைகளுக்கு சரியாக கடத்திட இந்நாவல் துணைசெய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கீழடியில் இருக்கும் கந்தசாமி மாமா வீட்டிற்கு விருப்பமில்லாமல்  செல்லும் கேப்டன் பாலுவிற்கு கிடைக்கும் சுடுமண் பொம்மையின் உரிமையாளன் ஆதன், கேப்டன் பாலுவை 3000 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து செல்கிறான்.

தான் சந்திக்கும் நிகழ்வுகள் கனவா நினைவா என புரியாமல் தவிக்கும் கேப்டன் பாலுவின் கைகளை நேசத்துடன் பிடித்து தான் வாழ்ந்த காலத்திற்கு அழைத்து சென்று வரலாற்றின் மீது காதல் கொள்ள செய்கிறான் ஆதன்.

3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கீழடியின் செழிப்பையும் கட்டமைப்பையும் மக்களின் வாழ்வியலையும் கண்ட பாலு வரலாற்றின் ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் கண்டு ரசிக்கிறான்.

சாதி, குலம், வர்ணமற்ற சமூகமாக வாழ்ந்த முன்னோர்களின் வாழ்வியல்களை ஆதன் எடுத்துரைக்க ஆச்சரியத்தின் விளிம்பிற்கு சென்று திரும்புவது பாலு மட்டுமல்ல வாசிக்கும் நாமும் தான்.

உண்மை வரலாற்றை உடைத்துச்சொல்கிறான் ஆதன். வரலாற்றை மீள் வாசிப்பு செய்ய கேள்விகளை எழுப்பும்படி அன்பு கட்டளையிடுகிறான் ஆதன்.

ஆதனுடன் அந்துவனாக கேப்டன் பாலு சிந்து சமவெளி காலத்திற்கு செல்கின்றனர். சிந்துவிலிருந்து மூட்டை முடிச்சுகளோடு மனதில் ஆயிரமாயிரம் கேள்விகளோடும் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்கின்றனர். ஏன் இந்த இடப்பெயர்வு?

எங்கிருந்தோ இடம்பெயர்ந்து வந்தவர்கள் காலம் காலமாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் மேல் ஏன் குரோதம் கொண்டனர்? மனிதர்கள் மேல் அந்த மனிதர்களுக்கு ஏன் அத்துணை வன்மம்? இடம் பெயர்ந்து நடந்து நடந்து தங்களுக்கான வாழ்விடங்களை உருவாக்கியவர்களின் வாழ்வியல் சிறப்பம்சங்கள் என்ன? – விடை அறிய ஆதனின் பொம்மையோடு பயணம் செய்திடுங்கள். உண்மை வரலாற்றை நம் குழந்தைகளுக்கு சரியான ஆதாரங்களோடு கற்றுத்தந்திட இந்நாவல் உதவிடும்.

ஆதனின் பொம்மையை உருவாக்கிட துணை நின்ற ஆதார நூல்களின் பட்டியலை இறுதியில் பதிவு செய்து வாசிப்பின் வாசலை விசாலமாக்கியுள்ளார் எழுத்தாளர் உதயசங்கர். தேடல் எனும் பயணத்திற்கான சரியான பாதை வாசிப்பு.

வகை: இளையோர் நாவல்

எழுத்தாளர்: உதயசங்கர்

பதிப்பகம்: வானம்

பக்கங்கள்: 96

விலை: ரூ.76

– ரா.சண்முகலட்சுமி (முகநூல் பதிவு)


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

Admin

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ’கர்னலின் நாற்காலி’ – நூல் மதிப்புரை.

இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

கபிலன் வைரமுத்து எழுதிய மெய் நிகரி நாவல் – மதிப்புரை

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

திணிக்கப்பட்டதா திராவிடம்? – நூல் அறிமுகம்

வேல ராமமூர்த்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – நூல் மதிப்புரை

சுப. உதயகுமாரன் எழுதிய ‘பச்சை தமிழ்த் தேசியம்’ – நூல் மதிப்புரை:

’சுளுந்தீ’ தமிழர் வரலாற்று நாவல் – நூல் மதிப்புரை

வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை – நாவல் மதிப்புரை

முனைவர் சு.தினகரன் எழுதிய ’101கேள்விகள் 100 பதில்கள்’ – நூல் மதிப்புரை

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – நூல் மதிப்புரை

Leave a Comment