‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படம் தொடர்பான விவகாரத்தில் இயக்குநர் ஷங்கர் – வடிவேலு இருவருக்கும் இடையே சுமூகதீர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’. இதன் 2 ஆம் பாகம் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி என்ற பெயரில் உருவாக உள்ளதாக இரு வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
ஆனால் ஆரம்பத்திலிருந்தே கதையில் வடிவேலு தலையிடுவதாகவும், இயக்குனர் சிம்புதேவனுடன் மோதல் போன்ற தகவல்கள் நிலவி வந்த நிலையில் வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.
அதனைத் தொடர்ந்து அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் அளித்தது. பிறகு வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது.
இதனால் வடிவேலுவால் பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது.நடுவில் கத்திச்சண்ட, மெர்சல் ஆகிய படங்களில் வடிவேலு நடித்தாலும் அவரால் முன்பு போல் பிரகாசிக்க முடியவில்லை.
கிட்டதட்ட 10 ஆண்டுகள் வடிவேலு இல்லாத படங்களே வெளியானதால் அவரது ரீ-எண்ட்ரி எப்போது என ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இதனிடையே இந்த தயாரிப்பாளர்கள் சங்கம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் ஷங்கர் – வடிவேலு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், எந்தவொரு சுமுகமான முடிவுமே எட்டப்படவில்லை.
இந்நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ’23-ம் புலிகேசி 2′ திரைப்படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார்.
மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வடிவேலு மீண்டும் முழுவீச்சில் இனி திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். இந்த செய்தி சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.