தமிழக அரசின் வெள்ளை அறிக்கையில் வெளியிடப்பட்ட குடும்பக் கடனை அடைக்க நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.
அதில் தமிழக அரசுக்கு ரூ. 5.70 லட்சம் கோடி கடன் சுமை இருப்பதாக வும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.2,63,976 கடன் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரமேஷ் என்பவர் முதல் நபராக தனது குடும்பத்துக்கான கடன் தொகையை காசோலை மூலம் செலுத்துவதற்காக காந்தி போல் வேடமணிந்து நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு கோட்டாட்சியர் எம். கோட்டைக்குமாரை சந்தித்த அவர் தான் வைத்திருந்த ரூ.2,63,976-க்கான வங்கிக் காசோலையை அளித்தார்.
ஆனால் அதனை வாங்க மறுத்த கோட்டாட்சியர் அந்த காசோலையை பெறுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த காசோலையை உயரதிகாரிகளிடம் வழங்கும்படி அவர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, அலுவலகத்திலிருந்து வெளியே வந்த ரமேஷ், இக்காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.