ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்
ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்பட்டு வந்தது.
ராஜீவ்காந்தி அவர்களின் பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த விருதை மாற்றி வேறொருவர் பெயரில் பிரதமர் மோடி அறிவித்திருப்பது அவரது அரசியல்
காழ்ப்புணர்ச்சியையும், சிறுமைத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது. பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும். கடந்த கால ஆட்சித் தலைவர்களின் பெயர்களை மாற்றிக் கொண்டே போனால், இன்றைய ஆட்சியாளர்கள் வைக்கிற பெயரை வருகிற ஆட்சியாளர்கள் மாற்றுவதற்கு பிரதமர் மோடியின் நடவடிக்கை காரணமாக அமைவது மிகுந்த துரதிருஷ்டவசமாகும். இத்தகைய ஆரோக்கியமற்ற போக்கை கைவிட்டு, வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் பொருளாதார நிலையிலிருந்து நாட்டை காக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் மோடி முன்வர வேண்டும்.
எனவே, இந்த பெயர் மாற்ற அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த அறிவிப்பை பிரதமர் மோடி திரும்பப் பெற்று, மீண்டும் பாரதரத்னா ராஜீவ்காந்தியின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.