தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வந்தார்.
சட்டப்பேரவை நூற்றாண்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வரவேற்புரையாற்றினார். குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.
பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வந்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 16-வது தலைவராக கருணாநிதியின் படம் இடம்பெறுகிறது. முதலமைச்சர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கைக்கு நேர் எதிராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. படத்திற்கு கீழ் “காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், பாஜக சார்பில் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை விழாவில் கலந்து கொண்டார். கீ.வீரமணி, வைகோ, திருமாவளவன், கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜி.கே.வாசன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.