டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி பிரிவில் இந்திய மகளிர் அணி, அரையிறுதிக்கு முதல் முறையாக முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது.
வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டம் என்பதால் தொடக்கம் முதலே மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. முதல் கால் பகுதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
2வது கால்பகுதி நேரத்தில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் இந்திய அணிக்கான முதல் கோலை அடித்தார். பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய வீராங்கனைகள் முயன்றபோதிலும் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் 1-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று 41 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி அர்ஜென்டினா அணியை எதிர்கொள்கிறது.