பாரத்நெட் திட்டத்தில் தமிழகம் இடம்பெறவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி அளிப்பதற்காக மத்திய அரசு பாரத்நெட் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.
இதன் மூலம் 16 மாநிலங்களில் உள்ள 3.61 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி விரிவுபடுத்தப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதனிடையே பாரத்நெட் திட்டத்தில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் தமிழகத்தில் எத்தனை கிராமங்கள் இடம்பெற்றுள்ளன என்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பெரம்பலூர் எம்.பி., பாரிவேந்தர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசிங் சௌகான், பாரத் நெட் திட்டத்திற்காக சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது , தற்போதைக்கு இந்தத் திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த கிராமங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அதேசமயம் தமிழகம் உள்பட மீதமுள்ள மாநிலங்களுக்கும் இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.