பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இந்திய நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார்.பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்
எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் “அனைத்து எதிர்க்கட்சிகளும் இங்கு கூடியுள்ளது. நாடாளுமன்றத்தில் எங்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக பயன்படுத்த பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? என்ற கேள்வியைதான் தொடர்ந்து கேட்கிறோம்.
இந்த கேள்விக்காக நாங்கள் நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால், நாங்கள், எங்களின் கடமைகளையே செய்கிறோம். அவர்களின் குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு எதிரானது என ராகுல் காந்தி தெரிவித்தார்.