அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துறையில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர், ஜி.பி.எஸ் மற்றும் வேகக்கட்டுப்பாட்டு கருவி வாங்க அனுமதித்ததில் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாகனங்களில் ஒட்டப்படும் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் ஒப்பந்தம், வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் வாங்கும் ஒப்பந்தம் ஆகிய இந்த இரண்டு ஒப்பந்தங்கள் தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் சிக்க காரணம் என்று கூறப்படுகிறது.
மோட்டார் வாகன சட்டத்தின் படி விபத்தை தவிர்க்க வாகனங்களுக்கு பின்பக்கம் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வேண்டும்.
அப்படிப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே ஆர்.டி.ஒ அனுமதி கொடுப்பார். இந்த ஸ்டிக்கர்களை விற்பனை செய்ய மத்திய அரசு இந்தியாவில் 11 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு, தனியார் இணைய தளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே ஸ்டிக்கர் பெற முடியும் என்ற விதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது.
அனுமதி பெற்ற இரண்டு நிறுவனங்களும் அதுவரைக்கும் 100 ரூபாய்க்கு விற்றுவந்த பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை திடீரென ரூ3000 வரை விலையை உயர்த்தி விற்பனை செய்து லாபம் பார்த்ததாக புகார் எழுந்துள்ளது.
திடீரென அதிக விலைக்கு ஸ்டிக்கர் விற்கப்பட்டதன் மூலம் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் கோடிகளுக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக லாரி உரிமையாளர் சம்மேளனம் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில் தான் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, அவர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரிடம் பெறபட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு விசாரணை விஸ்வரூபம் எடுக்குமா? இன்னும் பலர் சிக்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது