ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மதுரைக்கு வருவதை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியாகிசர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
அந்த சுற்றறிக்கையில் உள்ளது இதுதான் :
மதுரை மாநகராட்சி மண்டலம் – 4 சத்யசாய் நகரில் அமைத்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் ஆர் எஸ் எஸ் தலைவரான மோகன் பகவத், 22.07.2021 முதல் 26.07.2021 வரை நேரில் கலந்து கொள்ள உள்ளார்.
அவரின் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் இருந்து, அன்னார். கலந்து கொள்ள இருக்கும் நிகழச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளை சீராமத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல், போன்ற பணிகளை செய்திடவும், அவர் பயணிக்கும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சிப் பணிகளான சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை கண்காணித்தல் போன்ற பணிகளை கவனித்து வர அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், அமைச்சர் நேருவிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவருடைய ட்விட்டச்ர் பதிவில், RSS தலைவருக்கு வரவேற்பு மதுரையில் அரசு செலவில். மதுரைக்கு வந்த சோதனை நடவடிக்கை தேவை மதவாதிக்கு உதவும் அதிகாரிகள் மீது செய்வாரா அண்ணன்?” என கேட்டுள்ளார்.
அதேபோல மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தன்னுடைய ட்விட்டர் பதிவில்:
அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.