முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழக அரசின் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அடம்பிடித்து வருகிறார். இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி இன்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்த ஒரு கட்டுமான பணியை மேற்கொள்ள கூடாது. அதை மீறி தற்போது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்துக்குரியது.
இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இத்தகைய முயற்சி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாட்சியமைக்கு விடப்படும் சவால் ஆகும். எனவே கர்நாடக அரசின் இந்தத் திட்டத்திற்கு இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எந்தவிதமான அனுமதியும் வழங்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
- இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளை தடுப்பதன் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களது முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- தமிழ்நாடு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் இக் கூட்டத்தின் தீர்மானங்கள் ஒன்றிய அரசிடம் அனைத்து கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்க வேண்டும் அதற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.