தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக துணை நிற்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு ரத்து தொடர்பாக விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு நடைபெறுமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீட் தேர்வுக்கு விலக்கும் பெற போராடுவோம்..வெற்றி பெறுவோம் என்றும் முதலமைச்சர் சூளுரைத்தார்.
இதை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக நிச்சயம் துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.