மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
16ஆவது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜூலை மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
அதேபோல், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
இந்த சட்டத் திருத்தமானது, சிறுபான்மை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். இப்போதைய கூட்டத் தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறுவதால் தற்போது, தீர்மானம் நிறைவேற்றுவது முறையாக இருக்காது என்றும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.