கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் ஜூன் 21 ஆம் தேதி முதல் நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழக அரசு கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
அதில் பொது போக்குவரத்திற்கு தற்போது வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைய தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது.
குறிப்பாக, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கும், தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடனும் ஊரடங்கும் ஜூன் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஜூன் 21ம் தேதிக்கு பின் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் நகர பேருந்து சேவையை கட்டுப்பாடுகளுடன் தொடங்க தமிழக அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.