தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று குறைந்து வருவதன் காரணமாக தமிழகத்தில் தளங்களுடன் கூடிய ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தளர்வுகளில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் மதுபானங்களை மொத்தமாக விற்கக் கூடாது எனவும், டாஸ்மாக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுபானம் வாங்க வருவோர் 6 அடி இடைவெளிவிட்டு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும்.கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் மற்றும் கால இடைவெளிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் ஆகியவை உட்பட 14 வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.