சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடியில் சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார்.
கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் தற்போது 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அகழாய்வின் போது கீழடியில், நம் முன்னோர்கள் ஆபரணமாக பயன்படுத்திய கண்ணாடி மணிகள், கல் உழவு கருவி, கத்தி போன்ற ஆயுதம், எடைக் கற்கள், 13 தமிழ் எழுத்துகள் அடங்கிய பானை ஓடுகள், சங்கு வளையல்கள், குழந்தைகள் விளையாடும் செப்புப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அவற்றை பார்வையிட்ட அமைச்சர்களிடம், பொருட்கள் குறித்து தொல்லியல் துறை இயக்குனர்கள் விளக்கம் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு ,
சர்வதேச தரத்தில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனக் கூறினார். மேலும் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிக சமூதாயம் கீழடியில் வாழ்ந்துள்ளதாக கார்பன் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது என்றார்.
கீழடியில் கிடைத்த பொருட்களுக்கான அருங்காட்சியம் கீழடியிலேயே அமைய வேண்டும் என்பது தமிழக மக்களின் நெடுங்கால கோரிக்கைகளில் ஒன்று. அது தொடர்பாக தமிழக தொல்லியல் அமைச்சர் உறுதி அளித்துள்ளது வரலாற்று ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது!.
– மூவேந்தன்