ஓட்டுநர் உரிமம் எடுக்க இனிமேல் ஆர்.டி.ஓ அலுவலகம் செல்ல தேவையில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் எடுக்க வேண்டும் என்றால், ஏதேனும் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்த பின்பு மாவட்ட ஆர்.டி.ஓ அதிகாரி முன்பு வாகனத்தை குறிப்பிட்ட விதிமுறைகள் படி இயக்கி காட்ட வேண்டும்.
சரியான விதிமுறைகளை பின்பற்றி வாகனத்தை முறையாக இயக்கினால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் கிடைக்கும். ஆனால் ஜூலை 1ம் தேதி முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருவதாக மத்திய சாலை போகுவரத்துதுறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், உரிய அங்கீகாரம் பெற்ற மத்திய அரசின் பயிற்சி மையங்களில் பயிற்சிக்கு வருபவர்களுக்கு பயிற்சி அளிக்க “simulator” எனப்படும் மாதிரி வாகனங்கள் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பயிற்சி கொடுக்க வேண்டும் என்றும் நன்கு கற்றறிந்த பின்பு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் போது பயிற்சி பெற்ற நபர் ஆர்.டி.ஓ அதிகாரி முன்பு நடைபெறும் சோதனையில் பங்கேற்க அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறமையான ஓட்டுனர்கள் பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் ஏராளமான விபத்துகள் நடப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, இந்த புதிய நடைமுறைகள் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.