மெய் எழுத்து வாசக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..
சிற்ப இலக்கணம் தொடருக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் உலகப் பிரசித்தி பெற்றவை.
தமிழர்களின் கலைகள், இலக்கியங்கள், கோவில்கள், சிற்பங்கள்… ஒவ்வொன்றும் தனித்துவமானவை. கோவில்களும் அங்கே இருக்கும் சிற்பங்களும் தமிழரின் கலை வரலாற்றில் தவிர்க்க இயலாதவை. சிற்பம் ஒன்று அமைவதற்கு ஒரு வரையறை உண்டு. வரையறையின் கீழ் அமையும் சிற்பங்களுக்கு உயிர் உண்டு.
இந்த சிற்ப வரையறையை எளிமையாக நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளத்தான் இத்தொடர்…
” சிற்ப இலக்கணம் “
இந்தத் தலைப்பில் எங்கிருந்து தொடங்குவது.?
சங்ககாலம்.. நீத்தார் நினைவு கல்.. நடுகல் என்று ஆரம்பத்திலிருந்து தொடங்கினால் இத்தொடர் ரொம்பவே நீ…..ண்டதாய் இருக்கும்..
சிற்பங்களின் தோற்றம்.. வளர்ச்சி என்று தொடங்கினால் அது ஒரு ஆய்வுக் கட்டுரையாகக் அமையும்.
உத்தம ஷட்தானம் .. சப்ததானம் என்று ஆரம்பித்தால் அது சிற்பிகளுக்கான வழிமுறை ஆகிவிடும்.
சுத்தி வளைக்காம நேரிடையாக விடயத்திற்கு வருவோம்.
நம்மில் பெரும்பாலானவர்கள் சிறிய எளிய வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமே.. நமது உடனடித் தேவை சிற்பங்களை அறிதல் மற்றும் அடையாளம் காணுதல்.
கோவிலுக்குச் செல்கிறோம். கோஷ்டச் சிற்பங்களைப் பார்க்கிறோம்..
சிற்பத்தில் இருப்பவர் யார்? ஏன் இத்தனை கைகள்? இவரது இந்த வடிவத்திற்கான காரணம் என்ன? அவரது கை என்ன முத்திரையை கொண்டுள்ளது? இதன் பொருள் என்ன? இவர் அணிந்திருக்கும் ஆபரணத்தின் பெயர் என்ன? என்ன வகையான ஆசனத்தில் ஏன் அமர்ந்துள்ளார்? இந்த சிற்பத்தில் தேவையே இல்லாமல் ஒரு நாய் ஏன் உள்ளது? இந்த ஆயுதத்தின் பெயர் என்ன.? இந்த வகை சிற்பத்தின் இலக்கணம் என்ன? சிற்பத்தில் இருக்கும் உருவத்தை நாம் எவ்வாறு அடையாளம் காண்பது? – இதுமாதிரியான விபரங்களே நமது முதன்மை தேவைகளாக உள்ளன. இந்த விபரங்களையும் நூற்றுக்கணக்கான சிற்பநூல்கள் கூறுகின்றன.
சிற்ப நூல்கள் மொத்தம் எத்தனை என்பதே ஒரு விடை தெரியாத கேள்வி.
மானசரம் என்னும் சிற்பநூல் ’32 வகையான சிற்ப நூல்களான விஸ்வகர்மியம், விஸ்வம்…’ என்று ஆரம்பிக்கும். மனுசரம் என்ற நூல் அதுவும் ஒரு 28 சிற்ப நூல்களை விவரிக்கிறது, இதன் பட்டியல் ‘ஈசானம், சித்திர காஸ்யம்…’ என்று தொடங்கும். இப்படி அறியப்பட்ட அனைத்து சிற்ப நூல்களிலும் காணப்படும் செய்திகளின் சாரங்கள் இரண்டு மட்டுமே..
1. பிரதிமாலஷணம் என்று சொல்லப்படும் சிற்ப படிமங்களின் இலக்கணம்.
2. ரூப த்யானலஷணம் என்று சொல்லப்படும் சிற்பங்களின் உருவ அமைதி இலக்கணம்.
இந்த இரண்டையும் எளிமையாகவும் முழுமையாகவும் நாம் யாவரும் அறிந்து கொள்வதே இத்தொடரின் நோக்கம்.
தொடர்வோம்….
– மா.மாரிராஜன்.
2 comments
அருமையான தொடக்கம்.எளிமையான நடை.
உளமார்ந்த நல்வாழ்த்துகளும். நன்றிகளும்.
மிக்க நன்றி!.