தங்கள் உயிரைக் காப்பாற்றிய மருத்துவரை காப்பாற்ற ஒரு கிராமமே இணைந்து உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கரஞ்சேடு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பாஸ்கர் ராவ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியான மருத்துவர் பாக்யலட்சுமி குண்டூர் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் தம்பதியினர் இருவரும் கரஞ்சேடு கிராமத்தில் தங்கியிருந்து மக்களுக்கு கொரோனா சிகிச்சையும், நோய் தொற்று குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே தம்பதியினர் இருவருக்கும் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் மருத்துவர் பாஸ்கர் ராவ் நிலைமை கவலைக்குள்ளானது.
அவர் குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் ஆக்சிஜன் உதவி மூலம் சிகிச்சை பெற்றுவந்தார்.
மேலும் கடந்த மே 3 ஆம் தேதி பாஸ்கர் ராவின் நிலை மோசமடைந்ததால், விஜயவாடாவில் உள்ள ஆயுஷ் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அவருடைய சிகிச்சைக்கு சுமார் ரூ.1.5 முதல் 2 கோடி ஆகுமென மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி பாக்கியலட்சுமி சிகிச்சைக்கான தொகையை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து மே 9 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சோமாஜிகுடாவின் யசோதா மருத்துவமனைக்கும், மறுநாள் ஹைதராபாத் கச்சிபல்லி மருத்துவமனைக்கும் பாஸ்கர் மாற்றப்பட்டார்.
அவரின் சிகிச்சைக்கான பணத்தேவையை கேள்விப்பட்ட கரஞ்சேடு கிராம மக்கள் தங்களால் முடிந்த தொகையை கொடுக்க ரூ.20 லட்சம் மனைவி பாக்கியலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் இணையத்தில் பாராட்டை பெற்றுள்ளது.
– மூவேந்தன்