கொரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்காக மத்திய அரசு கோவின் இணையதளத்தை தொடங்கியது.
அதில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா உள்ளிட்ட 10 மாநில மொழிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், உலகின் மூத்த மொழியான தமிழ் சேர்க்கப்படவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில் புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளபோது தமிழ்வழியில் அந்த இணையதளத்தைப் பயன்படுத்திட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதன் அடுத்தகட்டத்தில் இரண்டு நாட்களுக்குள் தமிழ்மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கான இணையதளமான கோவின்(Cowin) இணையத்தில் தமிழ் மொழி 12வது மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது.
மலையாளம், கன்னடம், பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, பெங்காலி, மராத்தி உள்ளிட்ட மொழிகளுடன் தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் 12ஆவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
- மூவேந்தன்