பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் இன்னல்களை குறைக்கும் வகையில் மக்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.அந்த வகையில் பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணம் குறித்து அறிவிப்பு ஒன்றை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
அதாவது இறப்பு நிகழ்வுற்ற 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவித்தல், பதிவு செய்யப்படுவது சட்டமாக்கப்பட்ட ஒன்று.
இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை கால தாமத கட்டணம் ரூபாய் 100 ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டுக்குள் கால தாமத கட்டணம் ரூபாய் 200 ஆகவும், ஓராண்டிற்கு மேல் கால தாமத கட்டணம் ரூபாய் 500 ஆகவும் உள்ளது. இந்த கட்டண முறையானது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தி வருவது முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதன் அடிப்படையில் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அந்தக் கால தாமத கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
– மூவேந்தன்