டெல்லியில் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற நபரை பேஸ்புக் நிறுவனம் போலீஸ் உதவியுடன் காப்பாற்றிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் அலுவலகத்திலிருந்து டெல்லி சைபர் பிரிவு போலீசாருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் டெல்லியில் வசிக்கும் நபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்றும், அவரை காப்பாற்றும்படியும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட நபரின் இருப்பிடத்தை கண்டறிந்து அருகிலுள்ள காவல் நிலைய அதிகாரிகளுக்கு சைபர் பிரிவு போலீசார் தகவல் கொடுத்தனர். போலீஸ் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்ற போது அந்த நபர் அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து டெல்லி காவல்துறை துணை கமிஷனர் ராய் கூறுகையில், பேஸ்புக் நேரலை வீடியோவில் அந்த நபர் வீட்டின் உள்பக்கம் தாளிட்டுக் கொண்டார்.அவரது குழந்தை கதவை திறக்குமாறு வலியுறுத்தும் குரலும் கேட்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேஸ்புக் கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அதனால், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு தகவல் தெரிவித்து முகவரியை கண்டுபிடிக்கச் சொன்னதாகவும் துணை கமிஷனர் ராய் கூறியுள்ளார். இந்த சம்பவம் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது.
– மூவேந்தன்