நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மக்களை திணற வைத்துள்ளது. ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மக்கள்பெரிதும் அல்லல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிக அளவில் தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் இந்தியாவில் மூன்றாம் இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
15.5 சதவீத கொரோனா தடுப்பூசிகளை வீணடித்து, கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 37.3 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து ஜார்க்கண்ட் முதலிடத்தில் உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் 30.2 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
ஒரு கொரோனா தடுப்பு மருந்து குப்பியை திறக்கும்பட்சத்தில் 10 பேருக்கு அதனை செலுத்த முடியும். ஒரு குப்பியை திறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் 10 பேருக்கு செலுத்தவில்லை எனில், மீதமுள்ள மருந்து வீணாகி பயன்படுத்த முடியாமல் போகிறது. அந்த வகையில்தான் அதிகளவு தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வகையில் நாடு முழுவதும் 6.3 சதவீத தடுப்பூசிகள் வீணாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.
- பிரியா வேலு