குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டவ்-தே புயலால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்த மாநில பேரிடா் மீட்புக் குழு ஆணையா் ஹா்ஷத் குமாா் படேல், டவ்-தே புயல், குஜராத் மாநிலத்தின் கிா்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா நகரில் திங்கள்கிழமை இரவு கரையைக் கடந்தது. இறுதியாகக் கிடைத்த தகவல்படி, இந்த புயல் பாதிப்புக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை மொத்தம் 53 போ் உயிரிழந்தனா்.
சுவா் இடிந்து விழுந்ததால் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என தெரிவித்தார். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த பிரதமா் மோடி ரூ.1,000 கோடி நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
மேலும், புயல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவியாக மத்திய அரசு சாா்பில் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தாா்.
இது மட்டும் இன்றி குஜராத் மாநில அரசு சாா்பில் உயிரிழந்தவா்களின்
குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வா் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.
- கெளசல்யா அருண்