ஒடுக்கப்பட்ட பெண்மையின் கதை சொல்லும் ‘தவ்வை’ நாவல் – நூல் மதிப்புரை

SHARE

‘ராணியாய், ஜமீன்தாரிணியாய், எஜமானியாய் இந்தப் பெண்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குப்பின்னால் எத்தனை சிக்கல்கள் இருந்திருக்கும்’ என்ற கவிஞர் வைசாலியின் சிந்தனையே நாவலின் கருவாக அமைந்துள்ளது.

சாதாரண வாத்தியார் வீட்டுப் பெண்ணான, அறிவும் அழகும் நிரம்பிய தவ்வை, பணக்காரக் குடும்பத்தின் மருமகளாகிறாள். கணவன் தன் குறைபாட்டை மறைக்க அவளைப் பலவாறு இம்சிக்கிறான். அதை தன் மாமியார் மாமானாரிடமோ தன்னைப் பெற்றத் தாயிடமோ சொல்லாமல் தனக்குள்ளேளே வைத்து எல்லா துன்பங்களையும் அனுபவிக்கிறாள் தவ்வை. இந்தத் துன்பத்திலிருந்து மீள கணவன் சொல்லும் வழி அவளைக் கோபப்படுத்துகிறது. ஆனாலும் அவளுக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. இப்படியாக பெண் என்பவள் எப்படி இரகசியங்களை தனக்குள்ளேயே காத்து, அதன் வலியை தான் மட்டுமே அனுபவிக்கிறாள் என்பதை விளக்குகிறது இந்நாவல்.

இந்நாவலில் பொருளடக்கமே புதுமையாக உள்ளது. முன்னொரு காலம் என்று 7 அத்தியாயங்களும் பின்னொருகாலம் என்று 7 அத்தியாயங்களுமாக இடையிடை கலந்து கலந்து கதம்பம் போல் கோர்க்கப்பட்டுள்ள பாங்கு – அழகு.

திருமணம் ஆனது முதலான தவ்வையின் பழங்கதைகளைப் பேசும் முன்னொருகாலம் மாடக்குழி, அழிகம்பி, வெற்றிலை, நாகம், அம்மா, காளை, பகழி என்று செல்கிறது.

பின்னொருகாலம், எண்பத்தைந்து வயதிலும் பூ வைத்துக்கொள்ளும் தவ்வையின் செயலைக் காட்சிப்படுத்தும் பிச்சிப்பூவில் ஆரம்பித்து விறகடுப்பு, வாய்க்கால், அரண், நிலம், அருகன், கொற்றி என்று முடிகிறது. பின்னொரு காலம், வயதான தவ்வையின் இப்போதைய நிலையைச் சொன்னாலும் கூட அவள் மனதில் முன்னொரு காலத்தின் நிகழ்வுகளே ஓடிக்கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.

குழந்தை பிறக்காததற்குக் காரணம் யார் என்பதை மிகநுணுக்கமாக ஊகித்தறியும் ராமநாதனின் பெரியம்மாள் – பொன்னம்மா, ‘பாத்துப் பொழைச்சுக்கோ. மாப்பிள்ளை பேச்ச மீறி நடக்காத’ என்ற தவ்வையின் அம்மா – பார்வதி  இவர்கள் இருவரும்தான் கதையில் திருப்பத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.

அதுவரை ரங்கனை வெறுத்து வந்த ராமநாதன், பொன்னம்மாவின் பேச்சிற்குப் பிறகே, அவசரமாக தன் குழந்தையின் தகப்பனாக ரங்கனைத் தேர்வு செய்கிறான். 

‘நீங்க என்ன சொன்னாலும், எத்தன தடவ சொன்னாலும் எப்படிச் சொன்னாலும், நா இதைச் செய்யமாட்டேன். என்னை எங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிவிடுங்க’ என்ற தவ்வை தன் தாயின் பேச்சிற்குப் பிறகே மனம் மாறி, குழந்தையையும் பெற்றுக்கொள்கிறாள்.

தனது பிரச்சனையை மனம் விட்டுத் தாயிடம் பேசவேண்டும் எனத் துடிக்கும் தவ்வை. அடுத்தடுத்த வேலைகளோடு, வந்து சேரும் அன்னை, இருவரும் பேசிக்கொள்ளும் இடங்கள் மிக யதார்த்தமாக உள்ளன. 

‘நா ஒரு எட்டு போயி ஒங்கக்காக்காரியை பார்த்துட்டு வாறேன். அவ என்ன பண்ணி வச்சிருக்காளோ… தெரியலயே!‘ என்று புலம்பிக்கொண்டே வரும் பார்வதி, மகளின் நி்லையைப் பார்த்து, அவள் மேல் இருந்த கோபம் பதற்றமெல்லாம் வடிஞ்சு, ‘‘தவ்வ…!’’ என்று அழுகையுடன் அழைக்கும் இடம் ஒரு தாயின் அன்பை வெளிப்படும் நெகிழ்வான தருணத்தைப் படம் பிடிக்கிறது.

இந்தப் பிரச்சனையை அம்மா வேறு விதமாய்க் கொண்டுபோய்விடுவாளோ என்ற பயத்தில் மனதில் உள்ளதைச் சொல்லமுடியாமல் தவிக்கும் தவ்வை, இந்த வீடு, இந்த நல்ல மனுஷங்க இல்லேன்னா நமக்கு ஏதுடி வாழ்வு என்று கலங்கும் அம்மா, என்ன பிரச்சனை வந்தாலும் நீயே சமாளித்துக்கொள் என்று சொல்லி வெளியேறும் இடம், எளிய மனிதர்களின் வாழ்க்கை நிலையை விளக்குகிறது. சாய்ந்துகொள்ள அம்மாவின் தோள் கிடைத்ததே தவ்வைக்குப் போதுமாய் இருந்தது என்ற வரியின் வலிகள் ஆழமானவை.

தன் பேரன் விசாகனை தவ்வை சந்திக்கும் இடம் நெகிழச்செய்கிறது. ‘இவன் அவனேதான். அதே பனைமரமென வளர்ந்த தேகம், அடர்ந்த கருமை நிறத்தின் பளபளப்பு, தொண்டைக்குழியின் உருண்டை, நீண்டு தொங்கும் கைகள்…’ ரங்கனின் மறுபிறப்பாகவே விசாகன் தவ்வைக்குத் தோன்றுகிறான். 

‘அய்யா… நீ இருக்கியா?’ என்று கேட்பதும், ‘உள்ளார வாய்யா…’ என்று விசாகனின் கையைப் பிடித்து முன்கட்டுக்கு அழைத்துச்சொன்று, நாற்காலியைக் காட்டி, இங்கன உட்காருய்யா’ என்பதும் ‘இருய்யா… தண்ணி கொண்டோறேன் என்று எழுந்து சென்று கொண்டுவந்து தருவதும் உணர்ச்சி மயமான காட்சிகள். தவ்வை செல்லியம்மனுடன் பேசும் இடம் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் அத்தியாயத்தில், ‘கன்னக்கதுப்புல செவப்பு மின்னுது புள்ள..’ காதில் கிசுகிசுத்த குரல் காதருகில் கேட்க, திடுக்கிட்டு வாளியைக் கீழே போடுகிறாள் முதியவளான தவ்வை. ‘சாவு இன்னும் வராததற்குக் காரணம் இந்தக் குரலாகவும் இருக்கலாம்.’  என்று நினைக்கிறாள்.  இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தக் குரல் சார்ந்த நிகழ்வுகள் பற்றி எதுவும் நாவலில் குறிப்பிடப்படவில்லை. தவ்வைக்கும் ரங்கனுக்குமான உறவு இரண்டு பத்திகளில் முடிவடைந்து விடுவது ஏமாற்றம் தருகிறது. இருவருக்குமான உறவில் அவளின் மனம் என்ன நிலையிலிருந்தது என்பதைக் குறிப்பிட்டிருந்தால், இன்னமும் சிறப்பாக இந்நாவல் அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது. இருப்பினும் நாவலின் நடையும், கட்டுக்கோப்பும், திருநெல்வேலி மக்களின் இயல்பான பேச்சும், காட்சிகளைக் கண்முன்னே சித்தரித்துக்காட்டும் நேர்த்தியும் ‘தவ்வை’ காலத்தால் அழியாத நாவல் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

இந்நூலின் ஆசிரியர் அகிலா இதற்கு முன்பாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருந்தாலும் கூட, அவர் இனி ‘‘தவ்வை அகிலா’’ என்று அறியப்படும் அளவிற்கு இந்நாவல் சிறப்பாக அமைந்துள்ளது.

பக்கங்கள்: 208

விலை: ரூ.250.

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

  • ஷீலா சிவகுமார் (முகநூல் பதிவு)

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சுப. உதயகுமாரன் எழுதிய ‘பச்சை தமிழ்த் தேசியம்’ – நூல் மதிப்புரை:

தமிழ்த்தேசியத்துக்கான பெருந்திட்டம் – நூல் மதிப்புரை:

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

இரா.மன்னர் மன்னன்

’சுளுந்தீ’ தமிழர் வரலாற்று நாவல் – நூல் மதிப்புரை

யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் – மதிப்புரை.

வெளியானது மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூல்…

கோவி.லெனின் எழுதிய ’வி.பி.சிங் 100’ – நூல் மதிப்புரை

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய சூதாடி – நூல் அறிமுகம்

உலகெங்கும் தமிழர் தடம் – நூல் மதிப்புரை

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

ஜப்பானிய மொழி பெயர்ப்பு நூல் ‘பூனைகள் நகரம்’ – மதிப்புரை.

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

Leave a Comment