ஐபிஎல் லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதனால் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு வந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
அகமதாபாத்
டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் ஃபீல்டிங் செய்வதாக கூறினர். டெல்லி கேபிடல்ஸ் அணியில் அஷ்வினுக்கு மாற்றாக இஷாந்த் ஷர்மாவும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் சைனிக்கு மாற்றாக ரஜத் பட்டிதாரும் என இரண்டு அணிகளும் மாற்றங்களுடன் களம் இறங்கினர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலியும், படிக்கல்லும் களம் இறங்கினர். வந்ததுமே வேகம் காண்பித்தார்கள் இருவரும். இஷாந்த்தின் ஓவரில் 2 பவுண்டரி, அடுத்து ரபாடா ஓவரில் 2 பவுண்டரி, ஆவேஷ் கான் ஓவரில் ஒரு பவுண்டரி என சூப்பராக ஆரம்பித்தார்கள். ஆரம்பித்ததை பார்த்தால் எப்படியும் இவர்கள் இருவர் மட்டுமே நின்று ஆட்டத்தை முடித்து விடுவார்கள் போல என்று தான் தோன்றியது. அப்படி நினைத்து முடிப்பதற்குள் கை மேல் விக்கெட் கிடைத்தது டெல்லிக்கு.
விக்கெட் எடுத்தே ஆகவேண்டும் என்று வந்த ஆவேஷ் கானின் பந்தில் இன்சைடு எட்ஜில் பட்டு போல்ட் ஆனது கோலியின் விக்கெட். அதுவே ஆர்சிபியின் ரசிகர்களுக்கு பெரிய சோகம் என்றால் அதை விட பெரிய கொடுமை அடுத்த விக்கெட்தான். அடுத்து ஓவர் போட வந்த இஷாந்தின் முதல் பந்திலேயே கோலியை போலவே போல்ட் ஆகி சென்றார் படிக்கல்.
அடுத்து வந்த மேக்ஸ்வெல், ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்து, மிஷ்ராவின் பந்தில் லாங் ஆன்னுக்கு பந்து அடிக்க, அது ஸ்மித்தின் கையில் விழுந்து கேட்ச் ஆனது. அடுத்து டிவில்லியர்ஸும் பட்டிதாரும் நிதானமாக ஆடினர். இந்த கூட்டணியால் 54 ரன்கள் கிடைத்தது. பட்டிதாரும் 32 ரன்களில் அவுட்டாகிவிட டிவில்லியர்ஸின் ஷோ டைம் ஆரம்பம் ஆனது. பந்துகளை கவனமாக பார்த்து ஸ்டேடியத்தின் எல்லா திசைகளிலும் தூக்கி அடித்து வான வேடிக்கை காட்டினார் டிவில்லியர்ஸ். 19ஆவது ஓவரில் தன்னுடைய அரை சதத்தை முடித்தார் டிவில்லியர்ஸ், 148 ரன்கள் பெற்ற நிலையில் இருந்தது ஆர்சிபி. டெல்லியின் மிகப்பெரிய தவறு கடைசி ஓவருக்கு ஸ்டாய்னிஸை பந்து வீச செய்தது தான். கடைசி ஓவரில், ஸ்ட்ரெய்ட் லாங் ஆஃப்பில் ஒரு சிக்ஸர், லெக் ஃபென்ஸில் ஒரு சிக்ஸர், டீப் பாயிண்ட்டில் ஒரு சிக்ஸர் என ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறந்தன. ஒரே ஓவரில் 23 ரன்கள். 42 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து நாட் அவுட்டில் நின்றார் டிவில்லியர்ஸ். ஆர்சிபி 171 ரன்கள் என்ற ஸ்கோருக்கு வந்தது.
172 என்பது சுலபமான இலக்காக இருந்தாலும், டெல்லி அணி ஆட்டக்காரர்கள் ஆரம்பத்திலேயே சறுக்க ஆரம்பித்தனர். தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த தவனும், ப்ரித்வி ஷாவும் ஓவருக்கு 2 பவுண்டரிகள் தட்டி நன்றாக ஆரம்பித்தார்கள். ஆனால் மூன்றாவது ஓவரில் ஜேமிசனின் ஷாட் பாலில் எட்ஜ் ஆகி சஹலில் கையில் சென்று கேட்ச் ஆனது தவனின் விக்கெட். பெரிதும் எதிர்பார்த்த ஸ்மித்தும் ஒரே ஒரு பவுண்டரியோடு கேட்ச் ஆகி சென்றார். நன்றாக ஆடி வந்த ப்ரித்வி ஷாவும் ஹர்ஷல் பட்டேலின் பந்தில் கேட்ச் ஆகி 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து ரிஷப் பந்த் மற்றும் ஸ்டாய்னிஸ் நிதானமாக விளையாடினர். ஆனால் இந்த கூட்டணி நிலைக்கவில்லை, பட்டேலின் பந்தில் வெளியே எட்ஜ் ஆகி சென்று கேட்ச் ஆனது ஸ்டாய்னிஸின் விக்கெட். அடுத்து வந்த ஹெட்மயர் தான் டெல்லியை காப்பற்றினார். ஜேமிசனின் ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடித்து 21 ரன்கள் எடுத்து, தன்னுடைய அரை சதத்தையும் கடந்தார். கடைசி ஓவருக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. சிராஜின் அந்த ஓவரில், முதல் நான்கு பந்துகளுக்கு சிங்கிள்ஸும் 2 ரன்களும் தான் ஓடி எடுத்தனர். கடைசி 2 பந்துகளுக்கு 10 ரன்கள் என்ற நிலையில், இரண்டு பந்துகளும் பவுண்டரி சென்று 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது டெல்லி. நன்றாக ஆடி 53 ரன்கள் எடுத்த ஹெட்மயரும் 58 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த்தும் நாட் அவுட்டில் இருந்தனர். இந்த இருவரின் அரை சதமும் வெற்றிக்கு வழிகாட்டாமல் போனது பார்த்த அனைத்து ரசிகர்களுக்கும் வருத்தம் அளித்தது.
– சே.கஸ்தூரிபாய்