100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

SHARE

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களில் 100க்கும் மேலான நாடுகளால் பயன்படுத்தப்படும் பொருள் – என்ற வகையிலும், இந்தியாவின் தேர்தலில் விதிகளை உறுதி செய்ய உதவும் ஒரு கருவி – என்ற வகையிலும் தேர்தல் மை வகிக்கும் இடம் மிக முக்கியமானது. இது கண்டுபிடிக்கப்பட்ட காரணமே சுவாரசியமானது. 

1952ஆம் ஆண்டில் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் நடைபெற்ற போது போலி வாக்காளர்களைக் கண்டறிய இந்தியத் தேர்தல் ஆணையம் பெரும்பாடு பட்டது. இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டுபிடிக்க பல கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் தீர்வு கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த, இரண்டாவது பொதுத் தேர்தலிலிலும் போலி வாக்காளர்கள் பெரும் சிக்கலாக இருந்தனர்.

இந்நிலையில், தேசிய இயற்பியல் சோதனைக்கூடமான என்.பி.எல். (NPL – National Physical laboratory)லில் லண்டனைச் சேர்ந்த அறிவியலாளர் எம்.எல்.கோயல் தலைமையிலான குழுவே இறுதியில் ‘தேர்தல் மை’யை ஒரு நிரந்தரத் தீர்வாகக் கண்டு பிடித்தனர்.

இந்தியாவின் மூன்றாவது பொதுத் தேர்தலில் இந்த மை முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இப்போது வரையில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தேர்தல் தவிர பண மதிப்பு நீக்கநாட்களின் போது வங்கிகளில் கூட இந்த மை பயன்படுத்தப்பட்டது. எங்கு தயாராகிறது இந்த மை? – பார்ப்போம்.

தேர்தல் ஆணையம், தேசிய இயற்பியல் சோதனைக்கூடம், தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக்கழகம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களையும், விதிமுறைகளையும் பின்பற்றி கர்நாடகத்தை சேர்ந்த ’மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட்’ நிறுவனமும், ஹைதராபாத்தைச் சேர்ந்த ’ராயுடு லேபரட்ரீஸ்’ நிறுவனமும் இந்த மையை தயாரித்து வழங்குகிறன. இந்த மையை விநியோகிக்கும் அதிகாரம் இந்தியாவில் இந்த இரு நிறுவனங்களுக்கு மட்டுமே உள்ளது. 

இவற்றில் மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் நிறுவனமே முதன் முதலில் இந்த மையைத் தயாரித்தது. புது டெல்லியில் உள்ள தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் இந்த உரிமத்தை 1962 ஆம் ஆண்டு இந்நிறுவனத்திற்கு வழங்கியது. இந்த நிறுவனத்தின் வரலாறும் பழமையானது. 

1937 ஆம் ஆண்டில் அப்போதைய மைசூர் மாகாணத்தின் மகாராஜாவாக இருந்த நல்வாடி கிருஷ்ணராஜ உடையாரால் ’மைசூர் அரக்கு மற்றும் பெயின்ட் கம்பெனி’ என்ற பெயரில் இதுதொடங்கப்பட்டது.

1989 இல்தான் இந்த நிறுவனத்துக்கு ’மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1962 இல் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைபடி இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் மாநில பொது தேர்தலுக்கான மையை வழங்கி வருகிறது.

இந்தத் தேர்தல் மையில் சில்வர் நைட்ரேட் அடங்கியுள்ளது. இந்த ரசாயனத்தில் புற ஊதா வெளிச்சம் படும்போது அது தோலில் கறையை ஏற்படுத்துகிறது. வெளித்தோலின் செல்கள் மாறும்போதுதான் இந்த கறை நீங்குகிறது.

கடந்த 2006 ஆம் வருடத்தில் இருந்து இந்த மை பொதுவாக இடது ஆள்காட்டி விரலில் நகத்தின் உச்சியிலிருந்து முதல் தோலுடன் இணையும் அடிவரை கோடுபோல் போடப்படுகிறது. அதற்கு முன் இந்த மை பொதுவாக நகமும், தோலும் சேருமிடத்தில் ஒரு புள்ளியாக இடப்பட்டது. இரு முறை வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்படும்போது இந்த மை வாக்காளரின் இடது கை நடு விரலில் போடப்படுகிறது. 

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, இந்தியத் தேர்தல் ஆணையம் 10 மில்லி அளவிலான சுமார் 26 லட்சம் மை டப்பாக்களை வழங்கியது. இதற்காக மட்டுமே ரூ.33 கோடியை இந்தியத் தேர்தல் ஆணையம் செலவிட்டது.

இந்த மைக்கு எதிராக இதுவரை ஒரு புகார் கூட நிரூபிக்கப்பட்டது இல்லை. கனடா, இங்கிலாந்து, பாகிஸ்தான், டென்மார்க், துருக்கி, நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் இந்த மை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்போது உலகெங்கும் 100க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் தேர்தல் மையைப் பயன்படுத்துகின்றன.

தேர்தல் தவிர குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடும் பணிகளின்போதும் இந்த மை பயன்படுத்தப்படுகின்றது. இதற்காக உலக சுகாதார நிறுவனமானது இந்திய அரசுடன் நீண்டகால ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய தேர்தல் மைக்கு போட்டியாக உள்ள இன்னொரு மை மெக்ஸிகோ நாட்டின் மை ஆகும். அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் இதனையே பயன்படுத்துகின்றன. 1993ஆம் ஆண்டில் புதிய நம்பகமான தேர்தல் மையை உருவாக்கும் போட்டியை மெக்ஸிகோவின் அரசு நிறுவனமான இன்ஸ்டிடியூட்டோ ஃபெடரல் எலக்ட்ரல் (Instituto Federal Electoral) அறிவித்தது.

அதில் பல நாட்டவர்களும் பங்கேற்ற நிலையில் பிலிபர்டோ வாஸ்கஸ் டவிலா (Filiberto Vazquez Davila)- என்ற மெக்ஸிக உயிர்வேதியல் அறிஞர் புதிய வகை மையைக் கண்டுபிடித்தார். ஆனாலும் மெக்ஸிகோ மை இன்றுவரை இரண்டாவது இடத்தில்தான் உள்ளது.

இரா.மன்னர் மன்னன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: ம.பி.அரசு

முதலில் தயாரிக்கப்பட்டகோவாக்ஸின் தரமானதாக இல்லை :வல்லுநர் குழு தலைவர் அதிர்ச்சி தகவல்

Admin

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

குழந்தைகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

Admin

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து – வருகிறது 2-டிஜி!

பயந்தவங்க காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் – ராகுல் காந்தி

Admin

சைக்கிளில் சென்று வாக்களித்த நடிகர் விஜய்..! வைரலாகும் வீடியோ…

ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

போலி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்: ஓ.பி.எஸ் சூளுரை

Pamban Mu Prasanth

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீடிக்க வேண்டும்- அற்புதம்மாள் கோரிக்கை

Admin

தான் காதலித்த இரு பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர்.. சோகத்தில் 90 s kids !

Admin

Leave a Comment