காளைகளைக் காப்பாற்றினோம்… யானைகளை?: அழிவின் விளிம்பில் தமிழர் செல்வம்!.

SHARE

ஒரு மொழியில் ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் இருந்தால், அந்த சொற்களுக்கு உரிய பொருளுக்கும் அந்த மொழிக்கும் இடையே நீண்டகால நெருங்கிய தொடர்பு உள்ளது என்று பொருள். அரபு மொழியில் ஒட்டகத்தைக் குறிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன என்பது இதற்கான சிறந்த உதாரணம்.

தமிழில் சங்ககாலம் குறித்தே மிக அதிக சொற்களால் குறிக்கப்பட்ட ஒரு விலங்கு யானை. தமிழில் யானையைக் குறிக்கக் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. யானையைக் குறிக்கக் கூடிய சில வடமொழிச் சொற்களும் கூட தமிழில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. உதாரணமாக சில சொற்களை பார்க்க வேண்டும் என்றால்,

அடுங்குன்றம், அத்தி, அரணமத்தம்,  அருணம், அறுகு, அறுகை, ஆம்பலரி, ஆம்பல், அழுவை, ஆனை,  இடறி, இடம்மடி, இருள், உடாலடி, உம்பல், உல்லப்பியம், எயிறு, எருவை, எறும்பி, ஐநகம், ஓங்கல், கடாசலம், கடிவை, கடிறு, கடுமா, கம்பமா, கயம், கரபம், கராசலம், கரி, கருமா, கவளமான், களபம், களிறு, கள்வன், கறையாடி, குஞ்சரம், கும்பி, கூங்கைமா, கெசம், கைங்குன்று, கந்நாகம், கைப்புலி, கைம்மலை, கைமா, கொலைமலை, கோட்டுமலை, கோட்டுமா, சத்திரி, சாமசம், சிந்து, சிந்தூரம், சுண்டாலி, சூகை, சூசிகாதரம், தண்டம், தண்டவாலதி, தந்தமா, தந்தாய்தம், தந்தாவளம், தாமம், தாரதம், தும்பி, துருமாரி, தூங்கல், தெள்ளி, தோல், நகசம், நகரசம், நகரநாதம், நடைமலை, நாட்டுக்குற்றம், நால்வாயம், நூ, நூழில், நெருங்கை, பண்டி, பிணிமுகம், பிள்ளுவம், பீலு, புட்கரி, பூட்கை, பூதி, பூழ்க்கை, பெருமா, பென்னை, பேசகி, பேசிலம், பொங்கடி, மதகரி, மதகுணம், மதங்கமம், மதங்கம், மதசைலம், மதப்பொருப்பு, மதமலை, மதசாலம், மதாரம், மதாவளம், மந்தமா, மறமலி, மாகாயம், மாதங்கம், மிதங்கமம், முறச்செவியன், மையன்மா, வயமம், வயமா, வராங்கம், வல்விலங்கு, வழுவை, வாரணம், விடாணி, விதண்டம், வேதண்டம், வேழம் – ஆகிய சொற்களைச் சொல்லலாம்.

ஆனால் இந்தச் சொற்கள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பொருள் உண்டு. சில சொற்கள் ஆண் யானைகளையும், சில சொற்கள் பெண் யானைகளையும், சில சொற்கள் யானைக் குட்டிகளையும், சில சொற்கள் மதம் பிடித்த யானையையும், சில சொற்கள் பட்டத்து யானையையும், சில சொற்கள் யானைக் கூட்டத்தையும் குறிக்கக் கூடியவை.

மனிதர்களுக்கு குழந்தை, சிறுவன், இளைஞன் – என்று பருவப் பெயர்கள் உள்ளதைப் போல யானைக்கும் உண்டு. பிறந்து 7 வயதைக் கூட கடக்காத யானை கயந்தலை என்றும், 7 வயதிற்கு மேல் 10 வயதிற்குள் உள்ள நிற்கும் யானை போதகம் என்றும், 12 வயதுக்கு மேல் 15 வயதுக்குள் உள்ள ஓடி விளையாடும் யானை துடியடி என்றும், 15 வயதைக் கடந்த உணவு தேடிச் செல்ல பயிற்சி எடுக்கும் யானை களபம் என்றும் அழைக்கப்பட்டன. ஒரு யானை வளர்ந்து பிற இளம் யானைகளுக்குப் பயிற்சி எடுக்கும் பருவத்தை அடையும் போது அது கயமுனி என்று அழைக்கப்பட்டது.

யானைகள் அனைத்தும் நமக்குப் பார்க்க ஒரே வகையைப் போலத் தோன்றினாலும் அவற்றில் பல உள்வகைகள் உள்ளன. சில குறிப்பிட்ட வகை யானைகள் மட்டுமே பயிற்சி அளிக்க ஏற்றவை, சில வகைகளைக் கொண்டு குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்ய இயலும். இவை பெரும்பாலும் போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்டன.

பண்டைய தமிழகத்தில் மக்களின் பயன்பாட்டுக்கு சிறந்த யானையானது ஊத நாதன் அதாவது உதவும் யானை என்று அழைக்கப்பட்டது. கறையடி, உம்பல், பொங்கடி, தந்தி, அத்தி – ஆகிய வகைகளைச் சேர்ந்த யானைகளே ஊதநாதன் யானையாக்கப்பட்டன.

இவை கூர்மையான மதி உடையவை. நாம் சொல்லும் வேலையைச் செய்வதோடு, சுயமாகவும் இயங்கக் கூடியவை. மேலும் இந்த யானைகள் தங்களுக்குள் தாங்களே பணியைப் பகிர்ந்து கொள்வதும் உண்டு. குஞ்சரம், பகடு, பூட்கை, வாரணம், கடிவை – ஆகிய வகைகளைச் சேர்ந்தவை போர்களங்களுக்கு உகந்த யானைகள்.

இது இல்லாமல் தந்தங்களைப் பொறுத்தும் யானைகளுக்குப் பெயர்கள் இருந்தன. தந்தம் இல்லாத கரிணி வகையைச் சேர்ந்த பெண் யானை பிடி என்று அழைக்கப்பட்டது. தந்தம் உள்ள பெண் யானைகள் வடவை என்று அழைக்கப்பட்டன. களபம் என்பது தந்தம் இல்லாத ஆன் யானையைக் குறிக்கக் கூடிய சொல்லாக இருந்தது.

தமிழர்களின் பாரம்பரிய காளை இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதைப் போலவே யானை வகைகளும் அழிவின் விளிம்பில்தான் உள்ளன. ஆனால் எந்த வகை யானைகள் அழிந்துவிட்டன, எவை அழிவின் விளிம்பில் உள்ளன – என்ற கணக்கெடுப்பு கூட நம்மிடம் இல்லை என்பதுதான் பெரும் துயரத்திற்கு உரிய உண்ஐயாக உள்ளது. தமிழகத்தில் யானைகளில் அழிவு என்பது ஒரு வகையில் தமிழர் அறிவின் அழிவு, தமிழ் மொழியின் அழிவு என்று சொன்னால் அது மிகையாகாது!.

இரா.மன்னர் மன்னன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள். நாள்: 7 குட்டையை குழப்பிவிட்ட கமல்…

இரா.மன்னர் மன்னன்

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பா? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

Admin

சித்திரை திருவிழா: பச்சைப் பட்டுடன் வைகையில் வந்திறங்கிய அழகர்…

Admin

பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்… அமைச்சர் சேகர்பாபு

Admin

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

Admin

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்..!!

Admin

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்..!!

Admin

சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

Admin

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Admin

12 -ம் வகுப்பு மதிப்பெண் மதிப்பெண் கணக்கீடு எப்படி?முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

கொரோனா மூன்றாம் அலை : டோரா, மிக்கி மவுஸுடன் தயாராகும் வார்டுகள்!

Admin

Leave a Comment