ஈரமான ரோஜாவே…, காதல் ரோஜாவே…, ரோஜா ரோஜா… – என்று தமிழில் ரோஜாவைப் பற்றி நூற்றுக் கணக்கான பாடல்கள் உள்ளன. இதனால் தமிழ் மக்கள் ரோஜா என்பது பொதுவாக காதலுக்கே உரிய சின்னம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உலக அளவில் ரோஜா என்பது காதல் தவிர அன்பு, மரியாதை, கவன ஈர்ப்பு, தூய்மையை வெளிப்படுத்துதல் – எனப் பலவற்றுக்கும் பயன்படுகிறது.
வண்ண வண்ண ரோஜாவின் பின்னே உள்ள பலவித அர்த்தங்கள் என்னென்ன? ரோஜா மூலமாக செய்தியைச் சொல்வது எப்படி ? விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்…
ரோஜா – என்று சொன்னாலேயே அது பொதுவாகச் சிகப்பு நிற ரோஜாவையே குறிக்கும். பெரும்பாலும் காதலை வெளிப்படுத்தக் கொடுக்கப்படுவது இந்த சிகப்பு நிற ரோஜாதான். அதே சமயம் வெளிநாடுகளில் மூத்தவர்கள் மீதான மரியாதையை வெளிப்படுத்தவும், ஒரு விவகாரத்தில் தனக்கு அதீத ஆர்வம் உள்ளது என்பதைக் கூறவும் கூட சிகப்பு நிற ரோஜாவைப் பயன்படுத்துகிறார்கள்.
அடர் சிவப்பு நிறத்தினாலான ரோஜாவைத் தங்கள் விருப்பத்துக்கு உரியவர்களிடம், ‘இது எனக்குப் பிடித்திருக்கிறது’ என்பதை சொல்லாமல் சொல்லப் பயன்படுத்துகிறார்கள். மனைவிகள் கணவருக்கு வாங்கித் தரும் ரோஜா என்று இதனைச் சொல்லலாம்.
பிங்க் ரோஜாக்கள் அவற்றில் உள்ள பிங்க் நிறத்தின் அடர்த்தியைப் பொருத்து மூன்று விதங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அடர்ந்த பிங்க் நிற ரோஜா நன்றியைத் தெரிவிக்கப் பயன்படுகின்றது. சராசரி பிங்க் நிற ரோஜாவை மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், பிறரைப் பாராட்டவும் கொடுக்கின்றனர். இளம் பிங்க் நிற ரோஜா அழகு, ஆளுமை, கருணை போன்ற குணங்களை வெளிப்படுத்தவும் மரியாதை செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.
வெள்ளை ரோஜா தூய்மையின் சின்னமாகக் கருதப்படுகின்றது. சுயநலமற்ற அன்பை வெளிப்படுத்தக் கூடியது வெள்ளை ரோஜா. திருமணம் நிச்சயிக்கப்பட்ட தம்பதிகள் திருமணத்திற்கு முன்பு வெள்ளை ரோஜாவைப் பகிர்ந்து கொள்வது என்பது உள்ளத் தூய்மையோடு ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டதைக் குறிக்கும். அதே சமயம் ஒரு குற்றச்சாட்டு காரணமாக உங்களை ஒரு நபர் அல்லது நண்பர் வெறுக்கும் போது அவருக்கு வெள்ளை ரோஜாவைக் கொடுப்பது ‘நான் குற்றமற்றவன்’ என்பதை மறைமுகமாகக் கூறும் செயலாக இருக்கும்.
நண்பர்களுக்குக் கொடுக்க ஏற்றது மஞ்சள் ரோஜா. ஒருவரின் வளர்ச்சியில் நாம் மகிழ்ச்சியோ, பெருமிதமோ அடைந்தால் அவருக்கு மஞ்சள் ரோஜாவைக் கொடுக்கலாம் என்பது நடைமுறை. செம்மஞ்சள் அதாவது ஆரஞ்ச் நிற ரோஜாவை பிறரை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் கொடுக்கலாம். உற்சாகத்தோடு காட்சிதர வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆரஞ்ச் ரோஜாவை ஆடையில் சூட்டிக் கொள்வது உண்டு.
முதன் முறையாக ஒருவரைப் பார்த்த உடனேயே அவரைப் பிடித்துப் போய், அவரது அன்புக்குப் பாத்திரமாக விரும்புபவர்கள் தேர்ந்தெடுப்பது இளம் நீல நிற ரோஜாவை.
பீச் எனப்படும் வெளிரிய இளம் சிவப்பு நிற ரோஜா உயர்ந்த இடத்தில் இருந்தாலும், அடக்கமாக உணரும் மனநிலையைக் குறிக்கும். இதைத் தானே அணிந்து கொள்வது சிறப்பானது. கடந்த நூற்றாண்டில் பணக்கார இளம் பெண்கள் இப்படி அணிந்தனர்.
கருப்பு, பச்சை ஆகிய நிறங்களில் மரபணு மாற்ற ரோஜாக்கள் உள்ளன. இவற்றைப் பிறரை ஆச்சரியப்படுத்த விரும்புபவர்கள் மட்டுமே கொடுக்கின்றனர். இவற்றுக்கு அர்த்தம் எதுவும் இல்லை.
ரோஜாக்கள் இரட்டை நிறங்களிலும் வருகின்றன. பொதுவாக ‘என்னைத் திருமணம் செய்து கொள்ள சம்மதமா?’ என்று கேட்பவர்களே இரட்டை நிற ரோஜாக்களைக் கொடுக்கின்றனர். இரட்டை நிற ரோஜாக்கள் கிடைக்கவில்லை என்றால் ஒரே நிற ரோஜாவை இரண்டாகக் கொடுத்தும் திருமண சம்மதத்தைக் கேட்கலாம். விரும்பிய நபரை வெளியே அழைத்துச் செல்ல எண்ணும் போது அவரது விருப்பத்தைக் கேட்கவும் இரட்டை ரோஜாக்கள் கொடுக்கப்படுகின்றன.
அலுவல் ரீதியாக ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ரோஜாவைக் கொடுக்கும் போது, அவற்றில் ஒன்று மஞ்சள் நிறமாக இருப்பது நலம். மஞ்சள் ரோஜாவுடன் சிவப்பு ரோஜாவைக் கொடுப்பது பாராட்டுதலையும், மஞ்சள் ரோஜாவுடன் செம்மஞ்சள் நிற ரோஜாவைக் கொடுப்பது மன நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தக் கூடியது.
பொக்கே கொடுக்க விரும்புபவர்கள், அந்த பொக்கேவுக்கு உரிய காரணத்தையும் ரோஜாக்களின் எண்ணிக்கையிலேயே சொல்லலாம். 12 ரோஜாக்களைக் கொண்ட பொக்கே நன்றியைச் சொல்லவும், 25 ரோஜாக்களைக் கொண்ட பொக்கே வாழ்த்து சொல்லவும், 50 ரோஜாக்களைக் கொண்ட பொக்கே முழு அன்பை எந்த நிபந்தைகளுக்கும் அப்பாற்பட்டு வழங்குவதைக் குறிக்கவும் பயன்படுகின்றன.
மேற்கண்ட அனைத்தும் வெளிநாடுகளில் மிக இயல்பானதுதான். இந்தியாவில் அவசரப்பட்டு பூவை வாங்கிக் கொடுத்து அடியும் பட வேண்டாம். மனைவி அல்லது காதலிக்கு மட்டுமே மலர்களை வாங்கிக் கொடுங்கள். கொடுக்கும் முன்பு முள்ளை நீக்கிக் கொடுப்பது கூடுதலாக அன்பை வெளிப்படுத்தும்.
– இரா.மன்னர் மன்னன்