நமது நிருபர்
தமிழக தலைமைச் செயலாளரும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்ற ஆலோசனையில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்க உத்தரவு.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை விடவும் இந்தியாவில் மிகக் குறைவான பாதிப்பே ஏற்பட்டது. தமிழகத்திலும் படிப்படியாகக் குறைந்த கொரோனா பாதிப்பு பின்னர் தினந்தோறும் 500க்குக் குறைவானவர்களுக்கே பாதிப்பு என்ற நிலைக்கு வந்தது.
ஆனால், சமீபத்திய நாட்களில் இந்த நிலை மாறி உள்ளது. மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 1.2% அதிகரித்தது. தமிழகத்தின் பெரு நகரங்களிதான் இந்த கொரோனா பரவல் விகிதம் பெரிதும் அதிகரித்து உள்ளது, கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வில் மக்கள் அலட்சியம் காட்டுவதே இந்த திடீர் அதிகரிப்புக்குக் காரணம் என நம்பப்படுகிறது. இது தொடர்பாகத் தமிழகத் தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலிக் காட்சி வாயிலாக விரிவான ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையின் போது முகக் கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கும், அரசின் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.
இதனால் நிறுவனங்கள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றும்படியும், வெளியே செல்லும் நபர்கள் முகக் கவசம் அணிந்து சென்று அபராதத்தைத் தவிர்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.