வாஷிங்டன்.
நமது நிருபர்.
ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட்டின் நிறவெறி கொலை வழக்கில் இழப்பீடாக 196 கோடி ரூபாய் அளிக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்த ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்ட், இவர் அங்கு லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மே 25அன்று, இவர் ஒரு கடையில் பொருள் வாங்கிவிட்டு பணம் கொடுத்தார். அந்தப் பணத்தில் அவருக்கே தெரியாமல் ஒரு 20 டாலர் கள்ள நோட்டும் இருந்தது.
எனவே கடையின் பணியாளர்கள் மினியாபோலீஸ் நகரக் காவல்துறைக்கு தகவல் சொல்ல அங்கு டெரிக் சாவின் என்ற அதிகாரி தலைமையில் 4 காவல்துறையினர் வந்தனர்.
அவர்கள் ஜார்ஜ் பிளாய்ட்-டிடம் அடக்குமுறையாக நடந்து காவல் வாகனத்தில் ஏறச் சொல்ல பிளாய்ட் அதற்கு மறுத்தார். உடனே டெரிக் சாவின் பிளாய்ட்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் கால் முட்டியால் அழுத்தினார்.
அப்போது, ‘அழுத்தாதீர்கள்… என்னால் மூச்சுவிட முடியவில்லை..!’ என்று பிளாய்ட் கெஞ்சினாலும், அதை டெரிக் சாவின் கண்டுகொள்ளவில்லை. இதனால் சற்று நேரத்தில் பிளாய்ட் உயிரிழந்தார்!.
இறப்புக்கு முன்பாக காலை எடுக்கும்படி பிளாய்ட் கெஞ்சிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக, அமெரிக்கா முழுக்க காவல் அதிகாரியின் நிறவெறிக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.
இதனையடுத்து பிளாய்ட்டின் குடும்பத்தினர் டெரிக் சாவின் உள்ளிட்ட 4 காவல்துறையினர் மீது ஒரு வழக்கு, மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக ஒரு வழக்கு – என இரண்டு வழக்குகளைத் தொடர்ந்தனர்.
இதில் மினியாபோலீஸ் நகர நிர்வாகம் மீதான வழக்கில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்துக்கு 27 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 196 கோடி ரூபாய்கள்) இழப்பீடாக வழங்க மினியாபோலீஸ் நகர அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இது அமெரிக்க வரலாற்றில் ஒரு படுகொலைக்கு வழங்கப்பட்ட மிக அதிகபட்ச இழப்பீடு ஆகும்.
மறுபக்கம் டெரிக் சாவின் மீதான வழக்கில் அவர் தான் செய்தது தவறே இல்லை என்று இன்றுவரை வாதிட்டு வருவதால், அதன் தீர்ப்பு தள்ளிக்கொண்டே செல்கிறது.
மினியாபோலீஸ் நிர்வாகமே நடந்தது தவறு என ஒப்புக் கொண்டு இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளதும், டெரிக் சாவின் வழக்கில் அவருக்கு எதிரான தீர்ப்பு வர ஒரு காரணமாக அமையலாம் என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஜார்ஜ் பிளாய்டின் சகோதரி பிரிட்ஜெட் பிளாய்ட் கூறுகையில், “எனது சகோதரர் ஜார்ஜ் பிளாய்டின் நீதிக்கான பயணத்தின் இந்தப் பகுதி சுமுகமாக தீர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.
டாக்: george floyd