தமிழக தொல்லியல்துறையினர் தமிழகத்தில் 7 இடங்களில் புதிதாக அகழாய்வுகளைத் தொடங்கி உள்ளனர். அந்த இடங்களில் விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டையில் உள்ள தொல்லியல் மேடும் ஒன்று.
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 30 மீட்டர் ஆழத்தில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்கத் தொடங்கின. இப்போது வெம்பக் கோட்டை தொல்லியல் மேட்டில் 70 மீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டு பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. 100 மீட்டர் ஆழம் வரை தோண்டும் போது தொல்தமிழரின் வாழ்வியலோடு தொடர்புடைய பொருட்கள் இங்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டுவிட்டர் பக்கத்தில் வெம்பக் கோட்டையில் இதுவரையிலான அகழாய்வுகளில் கிடைத்த தொல்லியல் பொருட்களின் படங்களைப் பகிர்ந்து உள்ளார். இந்த கீச்சைப் பலரும் மறு பதிவு செய்து வருகின்றனர்.