800 ஆண்டுகளாக தீய சக்தியை அடைத்து வைத்திருந்த பாறை என்று ஜப்பானிய மக்கள் கருதிய பாறை ஒன்று சமீபத்தில் உடைந்துள்ளது. இதனால் தீய சக்தி வெளியே வந்திருக்கலாம் என ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து விரிவாகக் காண்போம்.
உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பல்வேறு மூடநம்பிக்கைகள் உள்ளன. இதில் ஜப்பானும் விதிவிலக்கு அல்ல.
கி.பி.12ஆம் நூற்றாண்டில் ஜப்பானை ஆட்சி செய்த அரசர் டோபா. இவரைக் கொல்ல தமாமோ நோமே என்ற பெண்ணை எதிரிகள் பயன்படுத்தியதாகவும், 9 வால்களைக் கொண்ட நரியாக மாறும் ஆற்றல் பெற்ற அந்த பெண்ணை அரசரின் பாதுகாவலர்கள் கொன்றாலும் அந்தப் பெண்ணை முழுமையாக அழிக்க முடியவில்லை என்றும் ஜப்பானில் ஒரு கதை உண்டு.
ஒன்பதுவால் நரியின் ஆவியை அழிக்க முடியாததால், அதை ஒரு பாறையில் அடைத்து உள்ளதாகவும், அந்தப் பாறைதான் ஜப்பானில் உள்ள ‘ஷீஷோ சேகி’ எனப்படும் ’கொலைக்கல் பாறை’ என்றும் ஜப்பான் மக்கள் நம்பி வந்தனர்.
அந்த கொலைக்கல் பாறைதான் சமீபத்தில் உடைந்து உள்ளது. இதனால் ஒன்பது வால் நரியின் ஆவி வெளியே வந்துவிட்டதாக ஜப்பான் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
ஆனால் ஜப்பானிய பாறை ஆய்வாளர்கள் அந்த கொலைக்கல் பாறையில் ஏற்கனவே கீறல்கள் இருந்ததாகவும், காலப்போக்கில் பருவமாற்றங்களால் கீறல் வழியாக பாறைக்குள் நுழைந்த நீர்தான் பாறையை உடைத்திருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.
ஜப்பான் அரசும் மக்களின் சந்தேகத்தை அகற்றி நம்பிக்கை கொடுக்க ஷீஷோ சேகி பாறை உடைந்தது குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்து உள்ளது.