பாசுபத சமயத்தின் விநாயகி சிலை கண்டுபிடிப்பு!. விநாயகர் வழிபாடு பிற மதங்களில் இருந்ததற்கு மற்றுமொரு சான்று!.

SHARE

மதுராந்தகம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம் இரும்பேடு கிராமத்தைச் சார்ந்த எழில் முருகன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டில் இந்தியத் தொல்லியல் துறையின் தொல்பொருள் ஆய்வாளர்கள் முனைவர் இரா.ரமேஷ், மோ.பிரசன்னா  மற்றும் தமிழ் கல்வெட்டு ஆய்வாளர் ப.த.நாகராஜன் ஆகியோரால் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது கல்வெட்டுடன் கூடிய இரண்டு சிற்பங்கள் கிடைத்தன அவை பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு இருந்தன.

அவற்றில் இரும்பேடு மேட்டுத்தெருவின் தெற்கேயுள்ள நீரோடையின் கரையோரம் காணப்பட்ட முதல் சிற்பமானது ’விநாயகி’ என அதன் சிற்ப அமைப்பின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டது.

இரண்டாவது சிற்பமானது உள்ளூர் மக்களால் துர்க்கை அம்மன் என அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் சிற்ப அமைதி ஆண் சிற்பக்கூறுகளை கொண்டிருந்தது.

மேலும் ஓராண்டு பிறகு அதே இடத்தில் ஆய்வாளர்களால் மறு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது விநாயகர் சிலை அருகே மேலும் ஓர் கல்வெட்டுடன் கூடிய சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முந்தைய இருசிற்பங்களின் சமகாலத்தைச் சார்ந்ததாக புதிய சிற்பமும் காணப்பட்டது. மேலும் அச்சிற்பத்தின் வடிவமைப்பில் அது பாசுபத சமயக் கடவுளான லகுலீசர் என உறுதிசெய்யப்பட்டது. 

இம்மூன்று சிற்பங்களும் கல்வெட்டின் எழுத்தமைதியின் அடிப்படையிலும் சிற்ப அமைதி அடிப்படையிலும் இவை கி.பி 5-6 நூற்றாண்டைச் சார்ந்தது எனலாம். இவை சுமார் 1500 ஆண்டுகள் பழமையானவை. 

“செயம் பட்ட முத்திர வரிகன் மடவதி” என்ற கல்வெட்டு வாசகம் மூன்று சிற்பங்களிலும் காணப்படுகின்றன. அதாவது இவ்வூரைச் சேர்ந்த முத்திர வரிகன் மடவதி என்பவர் தான் பெற்ற வெற்றியின் நினைவாக இச்சிலைகளை செய்து கொடுத்துள்ளார் என அறிய முடிகிறது. இச்சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் தொடர்பாக மேலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாசுபத சமயக் கடவுளான லகுலீசருடன் விநாயகி கடவுளுக்கும் சிற்பம் வடிக்கக் காரணம் என்ன? – என்ற கேள்வி இதன்மூலம் எழுந்துள்ளது. கி.பி.6ஆம் நூற்றாண்டில்தான் விநாயகர் வழிபாடு சைவ, சமண சமயங்களுக்குள் ஏற்றுக் கொள்ளப்பட்டது, முன்னதாக விநாயகர் வழிபாடு பாசுபதம், பவுத்தம் உள்ளிட்ட பிற சமயங்களின் வழிபாடாக இருந்தது – என்ற ஆய்வாள்களின் கூற்றுக்கு இந்த சிலைகள் வலு சேர்த்து உள்ளன. அதனால் இந்த சிற்பங்கள் தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிற்பங்களாக உள்ளன.

படங்கள்: கல்வெட்டு ஆய்வாளர் மோ.பிரசன்னா அவர்களின் பதிவில் இருந்து.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – பகுதி 3: அல்லல்பட்ட அரசர்கள்

Admin

சிற்ப இலக்கணம். பகுதி 4. தொழிற் கை முத்திரையின் வகைகள் (5 – 8)

கீழடியில் 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுப்பு.!!

Admin

அனைத்து உலோகங்களிலும் காசுகள்! – இராஜராஜனின் சாதனை!. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

கால்நடை என்ற சொல் ஏன் மனிதர்களுக்குப் பொருந்தாது?.

Admin

கீழடியில் கிடைத்த புதிய வகை தந்தப் பகடைக் காய்!.

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 8: தொழிற் கை முத்திரையின் வகைகள் (20 – 24)

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட சிவப்பு நிற பானைகள்

Admin

உலகின் மிகச் சுவையான மாம்பழ வகை எது?

ரோசாப்பூ என்று ஏன் ஆண் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கப்படுகின்றது?

Admin

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

Leave a Comment