ஜிப்ஸிக்கள் மகிழ்ச்சியாக இல்லை – மகசூல் -பயணத்தொடர் – பகுதி 11

SHARE

ஜிப்ஸிக்கள்:

டேரா கம்யூனிட்டி என்று அழைக்கப்படக்கூடிய நாடோடிப் பழங்குடிகள் இட்டார்சி ரயில் நிலையத்தில் இருப்பதாக தகவல். அந்தநேரம் தான் அங்கு வந்தார் பிலிப்ஸ் அவர்கள். இவர் உதவியுடன் ரயில்நிலையத்தில் இருக்கும் நாடோடி பழங்குடிகளை சந்திக்க சென்றோம். 

அவரது பெயர் பிலிப்ஸ் என்று தவறாக புரிந்து கொண்டிருந்தேன். அவரது உண்மையான பெயர் பிரசாந்த் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனாலும் பிலிப்ஸ் என்ற பெயர் நின்றுவிட்டது.

20 ஆண்டுகாலமாக சமூக சேவைத்துறையில் பணியாற்றி வருபவர் என்பதை நினைத்தபோது அவரிடம் இந்தியில் லாவகமாக பேசமுடியவில்லையே என்று வருந்தினேன். 

மெல்லமாக என்னை அழைத்து, அதோ அந்த லுங்கி கட்டியவன் இருக்கிறானே, அவனைப் பார். அவர்கள் நாடோடிகளாகவே வாழ்கிறார்கள். அவர்கள் அதிகமாக இப்பொது ஜபல்பூர் பகுதியில் இருந்து வருகிறார்கள் என்று சொன்னார்.

இவர்களுக்கு பொது விநியோகம் கிடையாது. இவர்களில் பலருக்கு ரேஷன் கார்டு கிடையாது. முதன்மையான விடயம் வீடு கிடையாது. ஆனால் குடும்பம் உண்டு. அதே போல ஆதார் கார்டு உண்டு. 

அதி ஆச்சரியமான விடயம் என்னவென்றால் (எனக்கு),  குழந்தைகள் கையில் சர்வசாதாரணமாக பான்மசாலாப் புழக்கம். ஒரு இரண்டு வயதிருக்கும் அவள்கையில் பான்மசாலாவை கொட்டி சாப்பிட தயாராகிகொண்டிருந்தாள்.

நான் பேட்டி ,நை என்றேன். என் உடன் வந்த பிரசாந்த் சார் நல்ல இந்தியில் சொல்லி தற்காலிகமாகத் தடுத்தார்.  எப்படியும் நாங்கள் போன பின்பு அந்த குடும்பமே அதை செய்யத்தான் போகிறது.

அடிமையாகி இருந்தார்கள். ஆண் பெண் வேறுபாடின்றி போதைப்பழக்கம் இருந்தது. மது, புகை, பான் மசாலா, புதிதாக வொய்ட்னர் சொல்யூஷன் போதை வேறு.. 

இப்போது எங்கோ திருமண மகாலில் பாத்திரம் கழுவும் வேலைக்கு போவதாகச் சொன்னார்கள். 

தலைக்கு 200 முதல் 300 ரூபாய் வரை கிடைக்குமாம். 

கல்வி, சுகாதாரம் என எதுவும் 75 ஆண்டுகளில் இவர்களை வந்து சேரவே இல்லை. 

அதேபோலத்தான் அரசு சொல்லும் கடமைகளும் கட்டுப்பாடுகளும் கூட இவர்களுக்கு தெரியாது..

குடும்பம் குடும்பமாகக் கூட்டம் கூட்டமாக நகர்ந்து கொண்டே இருக்கும் இவர்களில் பலருக்கும் வீடு என்றொன்று இந்தியாவின் எந்த மூலையிலாவது இருந்திருக்கும். 

இயற்கை சீற்றம் அல்லது அரசுத்திட்டம் இந்த இரண்டில் ஒன்றால் வீடிழந்திருப்பார்கள். 

பதிலியாக அரசு கொடுத்த நிலம்/வீடுகள் இருக்கும். ஆனால், அந்த இடங்களில் அத்தியாவசியத்துக்கு கூட ஏதும் இருக்காது. இதனால் நாடோடியாக வாழ்வது இவர்களுக்கு அந்த வீடுகளை விட சௌகரியமாக இருக்கிறது. 

அணைகள் கட்டுவதற்காக, சுரங்கங்கள் தோண்டுவதற்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக 2014-ம் ஆண்டுவரை ஏறத்தாழ 85 லட்சம் பழங்குடியினர் காடுகளை விட்டு விரட்டப்பட்டுள்ளனர் என்று என்றோ ஒரு செய்தி படித்தது இன்று இப்போது ஞாபகத்துக்கு வந்து போனது. 

எதையும் `சட்டத்தின்படி’ செய்யும் இந்திய அரசு, தற்போது வரை விரட்டப்பட்ட மக்களில் 21 லட்சம் பேருக்கு மட்டுமே மறுவாழ்வு அளித்துள்ளது.  (2014 கணக்கின்படி)

அவ்வளவுதான் அரசின் திட்டங்களால் முடிகிறது. அப்படியென்றால் மீதி பேர் என்னவானார்கள்? அவர்கள் இந்த திட்டத்துக்கு தகுதியில்லாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டனர்.

அப்படியென்றால் அந்த குடும்பங்களும் இப்படி எங்கோ நாடோடிகளாகத்தானே திரியும். 

நாடோடி பழங்குடிகள் என்பவர்கள் உள்ளபடியே ஒரு பழங்குடி பிரிவு அல்ல. அவர்கள் பாதிக்கப்பட்ட பழங்குடிப் பிரிவுகள் தொகுப்பு. 

கடலிலேயே பிறந்து கடலிலேயே வாழ்ந்து, கடலிலேயே இறக்கும்  மோக்கன் பழங்குடிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

எப்போதும் நம் வியப்புக்கும் ஏராளமான கேள்விகளுக்கும் உரியவர்கள் அவர்கள். 

அப்படியென்றால் அவர்களுக்கும் வீடுகள் இருந்திருக்கும். 

ஏதேதோ காரணங்களால் தொடர்ந்து வீடிழந்தபின் நிலத்தின் மீது கோபமடைந்துதான் கடலில் வாழத் தொடங்கியிருப்பார்களா? 

அப்படியென்றால் எப்படியாகப்பட்ட மரபறிவு மிக்கவர்களாக அவர்கள் இருந்திருக்க வேண்டும்.

மூதாய் மரம் என்றொரு நூலில் “அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு இந்திய அரசு செலவு செய்யப்போகும் மொத்த தொகையயும் செலவு செய்து, உலகெங்கும் இருக்கும் புத்திசாலிகள் என்று அழைக்கப்படுபவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் அழைத்து ஒரு மாநாடு நடத்தி யோசித்தாலும் கூட , பழங்குடிகளின் மரபறிவில் 1 சதமானம் கூட மீட்க முடியாது” என்று சத்தியம் செய்கிறார் பேராசிரியர் வறீதையா கான்ஸ்டண்டைன். இப்போது அந்த வரிகளை நினைத்துக் கொண்டேன். 

பழங்குடி வாழ்க்கையின் முதல் தகுதி விழிப்பு நிலை. இரண்டாவது மரபறிவு. 

இந்த நாடோடிகளுக்கு தன் இருப்பிடத்தில் பயன்படும் மரபறிவை வேறெங்கும் பயன்படுத்த முடியாது. இப்படியிருக்க,  இப்போது இவன் கூடவே திரியும் பிள்ளைகள் மரபறிவோடும் இருக்காது. மக்களோடு மக்களாகவும் கலக்காது. 

இவர்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், மரபறிவற்ற வெற்றுகூட்டத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம் என்று வேதனைப்படலாம். அதைத் தவிர வேறொன்றும் சொல்ல முடியவில்லை. நாடோடி பழங்குடிகள் கற்பழிக்கப்படலாம், கடத்தப்படலாம் (தோலுக்காக, உறுப்புகளுக்கான சந்தைகளுக்காக )

அரசு இவர்களுக்காக என்ன செய்யலாம் என்று ஏதாவது தோன்றினால் அது இவர்களின் வாழ்முறைகளுக்கு ஏற்றதாக இல்லை. 

சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்காக பல திட்டங்கள் மேற்கொண்டன. எந்த ஒரு திட்டமும் இவர்களை தங்க வைப்பதாக இருந்ததே ஒழிய, வாழ வைப்பதாக இல்லை. 

இதற்கு ஒரே வழிதான். அவர்களுக்கு வாழத்தெரிந்த வகையில் வாழ விடுங்கள். எல்லோருக்குமான வளர்ச்சிக்கு அவர்களும் வழி விடுவார்கள். 

ஏராளமான யோசனைகள் உள்ளே ஓடிக்கொண்டே இருந்தன. மனம் கனப்பதாக இருந்தது. இது எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கேயே தங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தை தரும் அந்த உறவை அடுத்த 1மணி நேரத்தில் சந்திக்கப் போகிறேன்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள்… நாள்: 11. கதைகளுக்கு லைக் பஞ்சம்….

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 10. 24 வகை தொழிற்கை முத்திரைகள் – சிறு பயிற்சி.

பிக் பாஸ் நாட்கள்: நாள் 3. இமான் அண்ணாச்சியின் ‘வானத்தைப் போல…’

பிக்பாஸ் நாட்கள்: நாள் 2. எல்லாமே கதையா கோப்பால்?

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 1: சிற்ப இலக்கணம் ஒரு அறிமுகம்.

மகசூல் – பயணத் தொடர்… பகுதி 1

Pamban Mu Prasanth

பிக்பாஸ் நாட்கள்… தொடக்க‌ நாள். யார் அந்த பங்கேற்பாளர்கள்?

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 5: தொழிற் கை முத்திரையின் வகைகள் (9 – 12)

பிக்பாஸ் நாட்கள்… நாள் 4: திருநங்கையின் வாழ்க்கை வலி!.

பிக் பாஸ் நாட்கள். நாள் 28. ‘வெளியேறினார் சின்னப்பொண்ணு’

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள்: 10. தாமரை கடந்து வந்த பாதை…

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள்: 9. ’பிரியங்காவுக்கு டிஸ்லைக்!’

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment