குழந்தைகளை ஈன்றெடுக்கத் தான் பெண்களின் வேலை என தாலிபான்கள் தெரிவித்துள்ளது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து தாலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். அங்கு முல்லா அகுந்த் தலைமையில் தாலிபான்கள் புதிய அரசை அமைத்துள்ள நிலையில் தாலிபான் ஆட்சியின் அமைச்சரவையில் பெண்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.
இதுகுறித்து தாலிபான் செய்தி தொடர்பாளர் சையத் ஜெக்ருல்லா ஹாஷிமியிடம் TOLO நியூஸ் நிறுவனம் கேள்வி எழுப்பியது.அதற்கு பதிலளித்த அவர் ஒரு பெண் எப்போதும் அமைச்சராக முடியாது. அது அவர்களால் முடியாத காரியம். அவர்கள் அமைச்சரவையில் இடம் பெற செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
அவர்கள் குழந்தைகளை தான் ஈன்றெடுக்க வேண்டும். இங்கு போராடி வரும் பெண் போராட்டக்காரர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்களையும் சார்ந்தவர்கள் எனவும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த மாதம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல நாங்கள் இப்போது இல்லை என தாலிபான்கள் விளக்கம் கொடுத்திருந்தனர். ஆனால் பெண்கள் குறித்து அவர்கள் இப்படி கருத்து சொல்லி இருப்பது அவர்களிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை காட்டும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர்.