மகாராஷ்டிராவில் கொரோனா 3வது அலை தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா 2வது அலை தற்போது தான் மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் அக்டோபர் மாதங்களில் 3வது அலை பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு வீட்டிலேயே பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என மத்திய, மாநில அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே மகாராஷ்டிராவில் கொரோனா தினசரி பாதிப்பு சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரமாக இருப்பதால் நோய்த்தொற்று விரைவில் கட்டுக்குள் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு சதவீதம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவது தெரிய வந்தது.
இதனால் 3வது அலை உருவாகி விட்டதா என்ற அச்சம் ஏற்பட்ட நிலையில், மும்பையில் கொரோனா 3வது அலை ஏற்கனவே தொடங்கி விட்டதாக மேயர் கிஷோரி பெட்னேகர் அறிவித்துள்ளார்.
இதேபோல் நாக்பூரிலும் கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதாக மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சர் நிதின் ராவத் கூறியுள்ளார்.
எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.