தூத்துக்குடியில் ஓய்வூதியம் கிடைக்காததால் சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகள் பாத்திரம் கழுவும் நிலை அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் இந்திரா நகரை சேர்ந்தவர் சுதந்திர போராட்டத் தியாகி மாடசாமி. இவர் சுதந்திரபோராட்டத்தின் போது சுபாஷ் சந்திர போஸின் ஐ.என்.ஏ அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இதனால் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது மாடசாமிக்கு தாமரை பட்டயமும், விடுதலை போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியமும் வழங்கப்பட்டது.
இதனிடையே கடந்த 2002 ஆம் ஆண்டு மாடசாமி காலமானதால் அவரது ஓய்வூதியத்தை மனைவி வள்ளியம்மாள் பெற்று வந்தார். இதனையடுத்து 2013 ஆம் ஆண்டு வள்ளியம்மாள் மரணம் அடைந்ததால் தந்தைக்கு வழங்கி வந்த ஓய்வூதியத்தை திருமணம் ஆகாத தமக்கு வழங்க வேண்டும் என மாடசாமியின் மகள் இந்திரா அரசுக்கு விண்ணப்பம் செய்தார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்திராவுக்கு ஓய்வூதியம் வழங்க கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது. இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடம் இந்திரா ஒப்படைத்து பிறகும், அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திரா வேறு வழியின்றி உணவகத்தில் பாத்திரம் கழுவி பிழைப்பு நடத்தி வருகிறார்.
மேலும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்ட போது, இந்திராவின் ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய அரசிடம் கேட்ட போது தமிழக அரசு தரப்பில் எந்த கோப்பும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால் இந்திராவின் கோப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் வந்த பின் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.