ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
ஹைதராபாத், தெலங்கானா.
கொரோனா பெரும்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் அவ்வப்போது விலங்களிடமும் கொரோனா தொற்று பரவி வந்தது. பூனை, நாய் போன்ற மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் வீட்டு விலங்குகளுக்குப் பரவிய கொரோனா இப்போது சிங்கங்களையும் விட்டுவைக்கவில்லை.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நேரு உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு காய்ச்சல் வந்ததைத் தொடர்ந்து, பூங்கா நிர்வாகம் அவற்றின் உமிழ்நீர் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியது. ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் 8 சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
உயிரியல் பூங்கா பராமரிப்பாளர் மூலம் சிங்கங்களுக்கு கொரோனா பரவி இருக்க வாய்ப்பு உள்ளதாக அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையமான சிஎஸ்ஐஆர் அமைப்பின் ராகேஷ் மிஸ்ரா ஆலோசகர் தெரிவித்துள்ளார். சிங்கங்கள் தற்போது நலமுடன் இருப்பதாக பூங்காவின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கொரோனா விலங்குகளுக்கும் வேகமாகப் பரவினால், உலகெங்கும் கொரோனா பரவல் இன்னும் மோசமடைய வாய்ப்புகள் உள்ளன என்பதால் இது போன்ற சம்பவங்கள் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெருகின்றன.
- பிரியா வேலு