சுடரொளி
சுவையால், சமைக்கும் முறையால், சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களால் உணவுகள் வகைப்படுத்தப்படுவதைப் போல, உண்ணப்படும் முறையாலும் உணவு வகைப்படுத்தப்படுகின்றது.
இப்போது காபி, டீ-யில் ஆரம்பித்து சாப்பாடு, பிரசாதங்கள் வரை அனைத்தையும் ‘சாப்பிட்டேன்’ என்று சொல்வதே வழக்கமாகிவிட்டது. ஆனால் உணவானது அது வயிற்றுக்குள் செலுத்தப்படும் முறையை வைத்து 4 விதங்களாகப் பிரிக்கப்படுகின்றது.
ஸ்ரீமத் பகவத்கீதையின் 15ஆவது அத்தியாயமான புருஷோத்தம யோகத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ‘அன்னம் பசாமி சதுர்விதம்’ என்று உணவு உண்ணுதலில் நான்கு விதங்கள் உள்ளதாகவும், அந்த நான்கு வித உணவுகளையும் ஜாடராக்னியாக இருந்து தானே எரிப்பதாகவும் கூறுகின்றார். எவை அந்த 4 வகைகள்? வாருங்கள் அறிந்து கொள்வோம்…
முதல் வகை பக்ஷ்யம் அதாவது பற்களால் கடித்து மென்று உண்பது. இரண்டாவது வகை சோஷ்யம் அதாவது உறிஞ்சி சாப்பிடுவது. மூன்றாவது வகை லேஹ்யம் அதாவது நாவால் நக்கி சாப்பிடுவது. நான்காவது வகை போஜ்யம் அதாவது கடிக்காமல் அப்படியே விழுங்குவது. இவற்றில் பக்ஷ்யம் என்பதை ‘பட்சம்’ அல்லது ‘பட்சணம்’ என்றும், லேஹ்யம் என்பதை ‘லேகியம்’ என்றும் அர்த்தம் தெரியாமலேயே பலரும் பயன்படுத்துவது உண்டு.
ஒரு குறிப்பிட்ட முறைக்கு உரிய உணவை அந்த முறையில் சாப்பிடுவதுதான் உத்தமமானது. கடித்து உண்ண வேண்டிய உணவை அப்படியே விழுங்கினால் பிற்காலத்தில் அது உடல் நலத்தைப் பாதிக்கக் கூடும். வயிற்றில் நெருப்பாக உள்ள இறைவனை நானும் பொறுப்பாக மதிக்க வேண்டும் அல்லவா?. உணவும் இறைவன்தான் என்றால் உண்ணும் முறையும் ஒரு வழிபாடுதானே? அதை மனதில் வைத்து உணவை எடுத்துக் கொள்வோம். நன்றி!.