ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும், வடக்கு கூட்டணி படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுவதுமாக திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில் அங்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் கடும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அங்குள்ள பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை மட்டும் தாலிபான்களால் கைப்பற்ற முடியவில்லை.
காரணம் அங்கு மறைந்த ஆப்கானிஸ்தான் அரசியல்வாதி அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத் தலைமையில் ‘வடக்கு கூட்டணி’ என்ற எதிர்ப்பு படை ஒன்று உருவாகியுள்ளது.
இந்த அமைப்பு தாலிபான்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ள நிலையில் கடந்த 2 தினங்களாக தாலிபான்களுக்கும், வடக்கு கூட்டணிக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது.
இதில் 350 தாலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 40 பேரை சிறைபிடித்துள்ளதாகவும் வடக்கு கூட்டணி படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இருபடைகளும் தொடர்ந்து சண்டையிட்டு வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.