தமிழகத்தில் 2வது கட்ட கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை இன்று முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளன.
கொரோனா காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு ரூ.4 ஆயிரம் நிவாரணத் தொகை அறிவித்தது.
இதில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் கடந்த மே மாதம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் 2ஆவது கட்ட நிவாரணத்தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இதற்கான டோக்கன் ஏற்கனவே தேதி குறிப்பிட்டு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இம்மாதம் இறுதிவரை இதனை பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல் நிவாரணமாக அளிக்கப்படும் மளிகைப் பொருட்களை வெளிச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.