முனைவர் சு.தினகரன் எழுதிய ’101கேள்விகள் 100 பதில்கள்’ – நூல் மதிப்புரை

SHARE

ஒரு சிறந்த புத்தகத்தின் அடையாளம், அதை வாசித்து முடித்த பின்பு நமக்குள் இருக்கும் சில கேள்விகளுக்கு அது பதில் சொல்லி இருக்க வேண்டும் என்பதைவிட   பல்வேறு கேள்விகளை நமக்குள் அது கிளறிவிட்டிருக்க இருக்க வேண்டும் என்பதே. அதனை இந்தப் புத்தகம் சிறப்பாகச் செய்திருக்கிறது.

கொசுக்கள் தன்னை விட ஐந்து மடங்கு எடையுள்ள மழைத்துளியை உதிர்த்து விட்டுத் தப்பிச் செல்வது,

கடும் வறட்சியில் பூர்வகுடிகளுக்கு தேக்கி வைத்த தண்ணீரைத் தந்த உலகின் மிகப் பழமையான ஆனைப் புளியமரம் என்கிற பாவோபாப் மரம்,

‘O’ ரத்தவகையினரை கொசுக்கள் விரும்பிக் கடிப்பது,

மொரீஸியஸில் அழிந்து போன டோடோவும் கல்வரியாவும்,

நம் முகம் கைகால்களின் தோல்களில் வாழும் டிமோடெக்ஸ் ஃபாலிகுளோரம்,

180° தலையை சுழற்றும் ஐந்து கண்கள் கொண்ட கும்பிடு பூச்சி,

ஆண்டனி கிளியோபாட்ராவுக்கு அளித்த முத்துபானம்,

சயாமிஸ் இரட்டையர்கள்,

ரஃபேஸியா அர்னால்டி எனும் உலகின் பெரிய பூ – போன்ற ஏராளமான புதுப்புதுத் தகவல்களை காட்சிகளை நம் கண் முன்னே அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

இவ்வளவு கேள்விகளுக்கும் பதில் சொல்கிற அதே நேரத்தில் அறிவியல் ஆக்கத்திற்கே மக்களின் சுயசார்புக்கே என்கிற அறிவியல் இயக்கத்தின் தாரக மந்திரத்தை ஒவ்வொரு பதிலிலும் கடைப் பிடித்திருக்கிறார் ஆசிரியர்.

காலனி கொலாப்ஸ் டிஸ்ஆர்டரால் வேலைக்காரத் தேனீக்கள் கூட்டில் சேராமல் போய்விட்டால் உலகம் என்னவாகும்? ஆறாவது சிற்றினப் போழிவு நிகழுமா? பரிணாமம் என்றால் என்ன? போன்ற கேள்விகள் மனிதம் சார்ந்த ஆழ்ந்த சிந்தனையை வாசிப்பவர்கள் மத்தியில் தூண்டிவிடுவன. 

சர்வதேச என்றோபி விதிகளின்படி ATP மூலக்கூறுகள் அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு நகர்வதை நிறுத்திக் கொண்டால் அதற்கு பெயர் தான் மரணம் என்பதை விளக்க வந்த ஆசிரியர், “சமூக என்றோபி விதிகளின்படி செல்வமும் அதிக இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு செல்ல வேண்டும் தானே! என்றோபி விதிகள் செயல்படாததால் மனிதம் செத்து விட்டதோ?”  என்று அதனை மனிதத்தோடு பொருத்தி சமத்துவத்தை வலியுறுத்தும் போக்கு நின்று கவனிக்கத் தக்கது.

இன்றைய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஆக்ஸிஜனுக்கு ஏற்பட்டுள்ள தேவையை, உலகில் அதிகமாக உள்ள ரூபிஸ்கா புரதத்தால் இயற்கையாக நமக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜனோடு ஒப்பிடும்போது மரம் நடவேண்டியதன் அவசியம் குறித்த அறிவியல் புரிகிறது.

ஆரியர்கள் யார்? எது தீட்டு? கதிர்வீச்சைத் தடுக்குமா மாட்டுச் சாணம்? இயற்கைத் தெரிவு இப்போதும் நடைபெறுகிறதா? போன்ற கேள்விகளில் நிகழ்கால அரசியல் ரீதியான மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் ரீதியான பதில்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

வரட்டுத்தனமாக தகவல்களை அடுக்கிக்கொண்டே செல்லாமல் சமூக சூழலியல் அரசியல் அக்கறையையும், சமத்துவத்தையும், மனிதநேயத்தையும் வலியுறுத்திச் செல்கிறார். பந்தி இலையில் உள்ள ஊறுகாய் போல பதில்கள்தோறும் அவற்றைத் தொட்டுச் செல்கிறார்.

எல்லாவற்றையும் விட நான் அதிகமாக நண்பர்களிடம் நகைச்சுவையாகப் பகிர்ந்து சிரித்தது குசு ஏன் நாறுகிறது என்கிற எட்டாவது கேள்விக்கான பதிலைத்தான். அம்மோனியாவும் ஹைட்ரஜன் சல்ஃபைடும் நமது வாழ்வில் எப்படி எல்லாம் விளையாடி வருகின்றன. 59% நைட்ரஜன், 21% ஹைட்ரஜன், 9% கார்பன்டைஆக்ஸைடு, 7% மீத்தேன், 4% ஆக்ஸிஜன் என்று அந்தப் பிரியற வாயுக் கலவையின் விகிதாச்சாரத்தைப் பட்டியலிட்டு, சராசரி அளவு 600 மிலி, வேகம் 10 அடி/விநாடி, வெப்பம் 98.6°C என்று ஆய்வு செய்து, பின்னால் வரும் போது பற்றவைத்தால் எரியும் என்பது வரையில் சொன்ன பேராசிரியர் இந்த ஆய்வைச் செய்தவர்கள் யார் என்ற தகவலை மட்டும் குட்டாக வெளிவிடவில்லை.

இந்தப் புத்தகத்தின் பெயரைச் சொன்னவுடன் பெரும்பான்மையான நண்பர்கள் கேட்ட முதல் கேள்வி அந்த 101வது கேள்விக்கு பதில் ஏன் இல்லை என்பதுதான். வழக்கமாக புத்தகத்தின் விலையைத் தான் கேட்பார்கள். ஆனால் புத்தகத்தின் தலைப்பே வாசகர்களை ஒரு கேள்வியைக் கேட்கவும், பதில் சொல்லப்படாத அந்த 101 ஆவது கேள்வி என்னவாக இருக்கும் என்ற ஆவலையும்  தூண்டி விட்டிருக்கிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவரும் மதுரை கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவருமான  முனைவர் சு தினகரன் இந்தப் புத்தகத்தில்  100 கேள்விகளுக்கு பதில் சொல்லி அதன் வழியாக 1000 கேள்விகளை விதைத்திருக்கிறார். மேலும் மேலும் தேடிக் கற்கும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறார். தேடலைத் தூண்டுவதை விட ஒரு புத்தகம் செய்யும் ஆகப்பெருஞ்செயல் என்னவாக இருந்து விட முடியும்?

பதிப்பகம்: அறிவியல் வெளியீடு

பக்கங்கள்: 102

விலை: ₹80

– மாணிக்க முனிராஜ் (முகநூல் பதிவு)


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சுப. உதயகுமாரன் எழுதிய ‘பச்சை தமிழ்த் தேசியம்’ – நூல் மதிப்புரை:

கீழடியைப் பின்னணியாகக் கொண்ட ’ஆதனின் பொம்மை’ நாவல் – மதிப்புரை

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – நூல் மதிப்புரை

ஆண்களுக்கும் வலிக்கட்டும் – ‘சூர்ப்பனகை’ புத்தக அறிமுகம்

Pamban Mu Prasanth

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய சூதாடி – நூல் அறிமுகம்

’சுளுந்தீ’ தமிழர் வரலாற்று நாவல் – நூல் மதிப்புரை

திணிக்கப்பட்டதா திராவிடம்? – நூல் அறிமுகம்

‘மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்

Admin

என் பெயர் நுஜூத் வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது – அரபு மொழிபெயர்ப்பு நூல் மதிப்புரை.

எனதருமை டாஸ்டாய் – உலக ஆளுமைகளுடன் உள்ளூர்மொழி பயணம் – புத்தக அறிமுகம்

Admin

யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் – மதிப்புரை.

தமிழ்த்தேச அரசியல் போராட்டம் – நூல் மதிப்புரை

Leave a Comment