கரிசல் காடு என்பது கருகிப் போன கந்தக நிலம். மழை பெய்தால் அந்த நிலத்தின் மணற்துகள்கள் ஒன்றோடு ஒன்று பிரிந்து, தனக்கு மேலே நடக்கும் மனிதர்களின் பாதங்களை உள்ளே இழுத்துக் கொள்ளும். அந்த மண்ணிற்கு மட்டுமல்ல அந்த மண்ணின் கதைகளுக்கும் மனிதர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றல் இருப்பதை உலகுக்குச் சொன்னவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள்.
1984ல் கரிசல் பகுதி எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து அவர் வெளியிட்ட ‘கரிசல் கதைகள்’ தொகுப்பின் வழியேதான் எனக்கு அறிமுகமானார் கி.ரா., அந்தத் தொகுப்பு எனக்கு ஒரு புதிய உலகத்தையே அறிமுகப்படுத்தியது.
அப்போது நான் பள்ளி மாணவன் என்பதால் அரிசிச் சோற்றுக்கு ஏங்கிக் கொண்டே சிவகாசி ஆலைகளில் பணியாற்றும் சிறுமிகளும், கூந்தலில் பூ சூட முடியாமல் தாலியில் பூச்சூடும் தாழ்த்தப்பட்ட பெண்களும், பறவைக் குஞ்சுகள் விளைநிலத்தின் வளத்துக்காக கொல்லப்படும் கிரௌஞ்ச வதமும் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் நீங்காதவை.
இந்தத் தொகுப்பில் இளம் எழுத்தாளர்களாகப் பரிந்துரைக்கப்பட்ட சோ.தர்மனும் ச.தமிழ்ச் செல்வனும் பூமணியும் இன்று தமிழ்ச் சிறுகதை உலகின் அடையாளங்களாகிப் போயிருக்கிறார்கள். அதிலும் இந்த தொகுப்பில் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘வெயிலோடு போய்…’ – என்ற கதைதான் பூ – என்ற பெயரில் பின்னர் திரைப்படமாகவும் வெளியானது.
இந்தத் தொகுப்பில் கி.ரா. எழுதிய கதை ‘நிலை நிறுத்தல்’. அடிமையைப் போல வீட்டு வேலைகள் வாங்கப்பட்ட சிறுவன் ஒருவன் எப்படி வளர்ந்து ஊர்ப் பூசாரியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான் என்பதைச் சொல்லும் கதை. இந்தக் கதையில் முக்கியக் கதாப்பாத்திரம் ஏழு நாட்களும் இரவில் கூத்து பார்த்துவிட்டு வந்து, அனைத்துக்கும் சேர்த்து 7 நாட்கள் இரவும் பகலும் உறங்குவதாக கி.ரா. ஒரு காட்சியை எழுதி இருந்தார்.
மறைந்த எழுத்தாளர் ஞாநி அவர்களின் ‘கேணி’ இலக்கிய சந்திப்பின்போது, ‘நீங்கள் கதையில் சொன்னபடி எங்காவது நடந்துள்ளதா?’ என்று கி.ரா. அவர்களிடம் கேட்டேன். ’கேள்விப்பட்டதுதான்’ – என்று அவர் பதில் சொன்னார்.
கிராமங்களில் கதைகள், கற்பனைக்கு எட்டாத சம்பவங்கள் குவிந்து கிடக்கின்றன. அங்கு பொதுவெளியில் சொல்லப்படும் பெருமைக் கதைகள் முதல், கிசுகிசுத்து சொல்லப்படும் பாலியல் கதைகள் வரை ஒவ்வொன்றும் தனித் தன்மைகளைக் கொண்டுள்ளன. அந்தக் கதைகளைக் கேட்டு, சிறந்த கதைகளை பதிவு செய்து, பிற சிறந்த கதை சொல்லிகளை ஊக்குவிக்கக் கூடிய ஒரு இணைப்பே கிராமங்களுக்கும் இலக்கியங்களுக்கும் நடுவே தேவைப்படுகின்றது. கரிசல் மண்ணுக்கு அத்தகைய இணைப்பாக வாழ்ந்தவர் கி.ரா. அவர்கள்.
அந்தமான் நாயக்கர், கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கிடை, பிஞ்சுகள் – என அவரது அனைத்து படைப்புகளும் கரிசல் மலர்களாகவே இருந்தன என்றாலும், அவை தமிழகம் முழுக்க மணந்தன என்றால் அதன் காரணம் கி.ரா. ஒரு தேர்ந்த கதை சொல்லியாக மட்டும் இல்லாமல் சிறந்த கதை கேட்பவராகவும் இருந்ததுதான்.
தனது உரையாடல்களில் தன்னைப் பற்றிய கேள்விகள் வரும்போதுகூட கரிசல் இலக்கியத்தில் தனக்கும் முன்னோடியாக இருந்த அழகிரிசாமி உள்ளிட்டோரையும், புதிய எழுத்தாளர்களையும் குறிப்பிட்டுப் பேசும் அடக்கமும், தன்னைச் சுருக்கி கரிசல் இலக்கியத்தை வளர்க்கும் கரிசனமும் அவருக்கே சொந்தமான மானுட அடையாளங்கள்.
அவர் தேர்ந்தெடுத்த கதைகளை மட்டுமே நமக்குத் தெரியும், அவர் கேட்ட கதைகள் இன்று யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டன. தனது 99ஆவது வயதில் கி.ரா. அவர்கள் முதுமை காரணமாக மறைந்திருக்கிறார். பெருவாழ்வுதான், சந்தேகமே இல்லை. ஆனால் அவருக்கு வாய்க்காமல் போன அந்த 100ஆவது வயதை இலக்கிய உலகம் என்றும் சபிக்கும்.
- இரா.மன்னர் மன்னன்