நீட் தேர்வு குறித்த அச்சத்தால் 2017ஆம் ஆண்டில் முதன்முதலாக தற்கொலை செய்து கொண்ட தமிழக மாணவி அனிதா. இவர் தற்போது அதிமுகவுக்கு வாக்கு கேட்பதைப் போன்ற மாற்றியமைக்கப்பட்ட காணொலி ஒன்று தமிழக அமைச்சரும் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலின் அதிமுக வேட்பாளருமான மாஃபா.கே.பாண்டியராஜனின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று காலை பகிரப்பட்டு இருந்தது.
இந்தக் காணொலி தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் சற்று நேரத்தில் அந்தக் காணொலி திடீர் என நீக்கப்பட்டது. பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த மாஃபா பாண்டியராஜன், அந்தக் காணொலியைத் தான் பதிவேற்றவில்லை என்றும், தனது டுவிட்டர் கணக்கை யாரோ தவறாகப் பயன்படுத்திவிட்டார்கள் என்றும், அப்படி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.
முன்னர் பாஜகவின் தமிழக நிர்வாகிகளில் ஒருவரான ஹெச்.ராஜாவின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை வந்தபோது, அந்த டுவிட்டை தான் போடவில்லை என்றும், தனது அட்மின்தான் போட்டார் என்றும் ஹெச்.ராஜா விளக்கம் அளித்தார். ஆனால் யார் அந்த அட்மின்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? – என்று இதுவரை தெரியவில்லை.
இந்த சம்பவத்தால், அமைச்சர் பாண்டியராஜனாவது தனது கணக்கில் இருந்து டுவிட் போட்டவர் யார் என்பதையும், அவர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் சொல்வாரா? அரசியல் தலைவர்கள் தங்கள் கணக்குகளை பிறர் பயன்படுத்த அனுமதிப்பதோ அப்படி செய்பவர்களை தண்டிக்காமல் இருப்பதோ சரியா? – எனப் பல்வேறு கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.
- நமது நிருபர்