சென்னை அண்ணா சாலையில் 10 வயது சிறுவன் சசிவர்ஷன் என்பவர் தனது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தூக்க கலக்கத்தில் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை உடனடியாக சிகிச்சை செய்ய முடிவெடுத்த டாக்டர்கள், சிறுவனுக்கு வலி தெரியாமல் இருப்பதற்கான ஊசியை செலுத்த முயற்சித்துள்ளனர். அந்த சிறுவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் டாக்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த தன்னார்வலர் ஒருவர் சிறுவனிடம் நைசாக பேச்சுக் கொடுத்தபோது, சசிவர்ஷன் ஒரு தீவிரமான விஜய் ரசிகன் என்பதை தெரிந்து கொண்டார்.
இதனையடுத்து அவர் தனது மொபைல் போனில் இருந்த விஜய் நடித்த பிகில் படத்தை காண்பித்தார். அந்த சிறுவன் உற்சாக மிகுதியில் பிகில் படத்தை பார்த்து கொண்டிருக்கும் போதே சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்கும் ஊசியை டாக்டர்கள் செலுத்தினர். அந்த சிறுவனும் விஜய் படத்தை பார்த்துக் கொண்டே சிகிச்சைக்கு ஒத்துழைத்தான். இதனையடுத்து மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்து முடித்தனர்.
இந்த சம்பவம் இணையதளங்களில் வைரலாக, சிகிச்சை பெற்று வந்த சிறுவன், அவரது குடும்பத்தினர், சிகிச்சை அளிக்க உதவிய தன்னார்வலர் ஆகியோரை சந்திக்க நடிகர் விஜய் நேரம் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.