கொரோனாவுக்குப் பலியான இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
திரைப்பட நடிகரும் இயக்குநருமான அருண்ராஜா கனா படத்தின் மூலம் பெரும் பாராட்டைப் பெற்றவர். இவர் தற்போது. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வரும் ஆர்டிகிள் 15 இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார்.
அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார்.
இதையடுத்து கொரோனாவால் இறந்த சிந்துஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள உதயநிதி,
”நேர்த்தியான இயக்குநர் – நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியுள்ளார்.
– கெளசல்யா அருண்