மாமல்லபுரம் அருகே அதிவேகமாக ஓட்டி காரை விபத்துக்கு ஏற்படுத்தியதாக நடிகை யாஷிகா மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாடல் அழகியாக வலம் வந்த யாஷிகா ஆனந்த், துருவங்கள் 16 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த யாஷிகா, இருட்டு அறையில் முரட்டு குத்து என்றப் படம் மூலம் கவர்ச்சி நாயகியாக தமிழ் சினிமாவில் பிரபலமானார். உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், சல்ஃபர், பாம்பாட்டம் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார் யாஷிகா.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று திரும்பிய யாஷிகாவின் கார் மாமல்லபுரம் அருகே சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் காரில் பயணித்த அவரது தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 2 நண்பர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
நடிகை யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டியதால் விபத்து நேர்ந்ததாக தெரிய வந்துள்ள நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.