டவ்-தே புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் மும்பையில் அதீத கனமழை பெய்யும் எனவும் குஜராத்தை புயல் தாக்கக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயல் டவ்-தே, இன்று உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது நகர்ந்து இன்று மாலை அல்லது இரவு குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும் மஹுவாவுக்கும் இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.
இதனால் மும்பையில் அடுத்த சில மணிநேரத்திற்கு அதீத கனமழை பெய்யும் எனவும், மணிக்கு 120 கி.மீ.க்கு காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் பாதிப்பிற்கு உள்ளாகும் என எச்சரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கொரோனாவால் மோசமான பாதிப்புகளை சந்தித்துவரும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில மக்களுக்கு டவ்-தேவின் பாதிப்பு குறித்த புதிய அச்சம் எழுந்துள்ளது.
– கெளசல்யா அருண்