தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்தும விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை 14.05.2021 அன்று தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் இந்த போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளை திரும்பப் பெற ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளில், மத்திய குற்ற புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள் அனைத்தும் திரும்பப்
பெறப்படும் – என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு பணி உத்தரவாதம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
– கெளசல்யா அருண்